பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீவகன் விடுத்த தூதன்

119

கலத்தில் பெரிதும் கருத்துடையவராகிய முனிவர், அவளது மனநிலையை அறிந்து கொண்டார். பின்னர் மன்னனுக்கு மனோன்மணியின் மணவினை குறித்து நினைவூட்டினார். அவளை மணப்பதற்குரிய தகுதி வாய்ந்த மணவாளன் சேரவேந்தன் புருடோத்தமனே என்பதையும் அவன் சிந்தை கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ‘அச்சேரனிடத்து நடராசனைத் தூதனுப்புக; அவன் சென்று காரியத்தை நன்றே முடித்துக் கொண்டு திரும்புவான்’ என்றும் நினைவூட்டினார்.

குடிலன் சூழ்ச்சி

முனிவரின் மொழிகளைக் கேட்ட மன்னன், அமைச்சனாகிய குடிலனிடம் இதுபற்றிக் கலந்து கொண்டே தூதனுப்புதல் நலமெனக் கருதினான். அவனோ தன்னுடைய சூழ்ச்சிகட்கெல்லாம் சுந்தர முனிவர் தடையாயுள்ளனர் என்று நினைத்தான். அம்முனிவர் மீது அரசனுக்கு வெறுப்பினை விளைத்தல் வேண்டுமென நினைத்தான். நடராசனுக்குப் பதிலாகத் தன் மகன் பலதேவனைத் தூதுதனுப்புமாறு செய்யவேண்டு மென உறுதி பூண்டான். பலதேவன் சேரனிடம் தூது சென்று, அவனை இகழ்ந்து பேசுமாறு செய்து விட்டால் சினங்கொண்ட சேரன் போருக்குச் சீறியெழுவான்; அவ்வாறு போர் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே மறைமுகமாகச் சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமெனத் திட்டமிட்டான்.

சீவகனும் குடிலனும்

மறுநாள் குடிலன், மன்னன் மாளிகையை அடைந்தான். இளவரசியின் திருமணச் செய்தி