பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

இலக்கியத் தூதர்கள்

வேண்டுவது என்ன?’ என்று வினவினான். அதுகேட்ட பலதேவன், “சேரனும் செழியனும் போரினில் எதிர்த்தால் யார் பிழைப்பரோ? நீவிர் இருவரும் போர் புரிந்தால் வீணே பலர் இறந்தொழிவர். அத்தகைய துன்பம் நேராதிருக்கவே பாண்டியன் என்னை இங்கு ஏவினான். நன்செய் நாட்டை உரிமை நோக்கிப் பாண்டியனுக்கு அளிப்பதே கடனெனக் கூறவும் நின் கருத்தை யறிந்து மீளவுமே என்னைத் தூது விடுத்தான்-வேந்தே ! நினக்கு நன்மை விளைக்கும் உண்மை சிலவற்றை உரைக்கிறேன். நீவிர் இருவரும் பகைத்தால் யாது விளையுமோ? அறியோம். போரில் அஞ்சாத ஏறனைய சீவகனுடன் நீ வெஞ்சமர் விளைத்தல் நன்றன்று. மேலும் நன்செய் நாட்டை உரிமை பாராட்டி நீயே அடைதற்குரிய வழியொன்றும் உளது. எங்கள் மன்னனுக்குக் கண்ணனைய பெண்ணொருத்தி யுள்ளாள் அவள் பேரெழில் பெற்றவள்; அமுதே உருவெடுத்தாற் போன்ற ஆரணங்கு அன்னாள். அழகிய நறுமலராய் மலர்ந்துள்ளாள் அவள். அந் நறுமலர்த் தேனை நாடிப் பருகும் வண்டு, இதோ! இவ்வரியணையில் வீற்றிருக்கிறது. அம்மனோன்மணி நின் அரியணையில் அமர்ந்தால் தென்னவன் மனம் திருந்தும் ; நன்செய் நாடும் நின்னதாகும்” என்று கூறி நின்றான்.

சேரன் வீரமொழி

அதுகேட்ட சேரன், ‘நன்று ! நன்று!’ என்று சிரித்தான். “ஒகோ ! உங்கள் நாட்டில் மலரையணை தற்கு வண்டினைக் கொண்டு விடுவார்கள் போலும் ! இருபுறக் காதலின்றி எம் நாட்டில் திருமணம் இல்லை.