பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

இலக்கியத் தூதர்கள்

அத்தினாபுரியில் கண்ணன் அருஞ்செயல்கள்

விதுரன் விளம்பிய மொழிகளைக் கேட்டுக் கண்ணன் மகிழ்ந்தான். “நெய்யைச் சொரிந்து விறகுகளை அடுக்கினாலும் காற்று வீசவில்லையாயின் அவ்விறகில் தீப்பற்றமாட்டாது. அதுபோல் நின் கைவில் முறிந்து போனதனால் துரியோதனன் படை அழிவது உறுதியாகும்; நின்னைத் துரியோதனன் இகழ்ந்துரைத்த சொற்களை மனத்திற் கொள்ளாமல் மறந்திடுக” என்று கூறினான். பின்னரும், இன்றியமையாத பல செயல்களைப் புரிந்தருளினான் பாண்டவர்களின் அன்னையாகிய குந்திதேவியைச் சந்தித்துக் கன்னன், அவள் பெற்றமைந்தனே என்பதை அறிவுறுத்தினான். அவனிடம் உள்ள அரவக்கணையை வரப்போகும் போரில் அருச்சுனன் மீது ஒரு முறைக்குமேல் செலுத்தாதிருக்குமாறு உறுதிமொழி பெற்றுவரச் செய்தான். இந்திரனைக் கன்னன்பால் அனுப்பி, அவனுடன் பிறந்த கவசகுண்டலங்களைக் கவர்ந்து வருமாறு செய்தான். துரியோதனன், தன்னைக் கொல்லுதற்கென்று செய்த சூழ்ச்சியினை வென்று, தன் பெரு வடிவைக் காட்டியருளினான். துரியோதனனுக்குப் போரில் துணையாவதில்லையென்று அசுவத்தாமனிடம் உறுதிமொழி பெறுபவனைப்போல் சூழ்ச்சி புரிந்தான்.

கண்ணன் தலைமைத் தூதன்

தூதனாக அத்தினாபுரம் அடைந்த கண்ணபிரான் திரும்பிச் சென்று தருமன் முதலியோரைக் கண்டு அத்தினாபுரத்தில் நிகழ்ந்த அரிய செய்திகளையெல்லாம் விரித்துரைத்தான். ஆனால் கன்னனுக்கும் குந்திதேவிக்கும் இடையே நிகழ்ந்த செய்திகளை மட்டும் வெளிப்படுத்தாது மறைத்தருளினான். இம்முறையில் தூது சென்று மீண்ட கண்ணபிரான் தலையாய தூதர்க்கு நிலையாய எடுத்துக்காட்டாக இலங்குவதைக் காணலாம்.