பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

இலக்கியத் தூதர்கள்

னகத்தே கொண்டொளிர்வது. விதிவழி விலகிய இந்திரன் முதலான வானவர், சூரன் முதலான அசுரர்களின் வாயிலாக வினைவழி வரும் துன்பங்களால் துயரம் அடைகின்றனர். பின்பு இறைவனை நினைவு கூர்ந்து, அன்பால் வழிபாடாற்றி, முருகப்பெருமான் துணைகொண்டு சூரன் முதலானோரை அழித்து இன்புறுகின்றனர். இவ்வரலாற்றால் உயர்ந்த சமய உண்மையைக் கச்சியப்பர் திண்மையுறப் புலப்படுத்துகின்றார். ‘விதிவழி தவறிய உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வினைப் பயன்களால் வெந்துயர் எய்தும்; அப்போது இறைவனை நினைந்து அன்பால் வழிபாடு புரியத் திருவருள் வாய்க்கும்; அத் திருவருள் துணைகொண்டு மும்மலங்களை நீக்க, இறவாத இன்ப முத்திவந்துறும், என்னும் தத்துவத்தை உட்கொண்ட கந்த புராணம் சொல்லாலும் பொருளாலும் அழகுற்று விளங்குவது; உயர்ந்த வேலைப் பாட்டுடன் இழைக்கப்பெற்ற மாணிக்கம் போல்வது.

நூலின் அமைப்பும் சிறப்பும்

மேலும், இந்நூல் இலக்கண மேற்கோளாகக் காட்டப்பெறும் சிறந்த இலக்கியமாகும். இந்நூலாசிரியர் ஒரு பொருளைக் குறிக்கும்போது அதன் பெயராகிய பல சொற்களாலும் குறிப்பிடுவர். இவர் நடையிலே தொனிப் பொருள் சிறந்திருக்கும். இந்நூலின் நடை, தெளிந்த நீரோட்டம் போன்று ஒரே தன்மையாக வீறுபெற்றுச் செல்லும் நல்லியல்புடையது. இந்நூலின்கண் சைவாகமங்களின் கருத்துக்களும், வேதோபநிடதங்களின் கருத்துக்களும் இனிது விளக்கப்படுகின்றன.