பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

63



எந்த வாய்ப்பு கிடைக்கிறதோ, அதில் ஈடுபட்டு, இணையற்ற இந்த சக்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகவே, 'ஆதிபகவன் முதற்றே உலகு' என்று பாடிய பைந்தமிழ்ப் புலவர் வள்ளுவப் பெருந்தகை, சாதாரண மக்களுக்கு மட்டும் போதிக்கவில்லை.

விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு பொது அறிவுரையாக, புது அறிவுரையாக, இந்த வரிகள் கூறுவதை, நாம் மகிழ்ச்சியாகப் போற்றி ஏற்றுப் பண்பட்டுக் கொள்ள வேண்டும்.

உச்சி வெயிலில் மட்டும் நாம் ஒதுங்கி இருக்க வேண்டும். மற்றபடி, மாலை காலை நேரங்களில், வெயிலில் விளையாடி, வலிமை பெற்றுக் கொள்ளலாம்.

மேனாடுகளில் சூரியக் குளியல் (Sun bath) என்றே இருக்கிறது. அதாவது வெயில் வந்தால், வீதிகளில், கடற்கரைகளில் கட்டில் போட்டுப் படுத்துக் கொண்டு, அனுபவிப்பது.

நமக்கோ தினம் தினம் சூரியனைக் காண்கிற சூழ்நிலை அமைந்துள்ளது.

பரிதியின் உதவியை, பயன் தெரிந்து பயன்படுத்திக் கொண்டு வாழ்வதே பகுத்தறிவாளர்க்கு உரியதாகும்.

ஆதிபகவனைக் காண்போம். அந்த ஒளியில் மகிழ்வோம். வைட்டமின் D யைப் பெறுவோம். எலும்புகளின் வலிமையை வளர்ப்போம். இளமையைத் தொடர்ந்து காப்போம். முதுமையை நெருங்க விடாது சற்று தூரத்திலே நிறுத்தி வைப்போம்.

இந்த அறிவியல் இன்பம் படைப்போம். இன்னல் துடைப்போம்.