பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 119


கூட்டம் வழிந்து பொங்கியது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் எப்படி ஏறுவது என்று அவள் அல்லாடிக் கொண்டிருந்தாள். முன்பெல்லாம், முதல் வகுப்பில் போகும்படி கணவன் வற்புறுத்துவான். அவள்தான், 'ஸ்லீப்பர்' போதும் என்று வாதாடி வெற்றி பெறுவாள். இப்போ ரிசர்வ் கூட செய்யவில்லை.

மணிமேகலை கையைப் பிசைந்துகொண்டிருந்தபோது, மணி ரிசர்வேஷன் டிக்கட்டோடு வந்தான். நூறு பேர் ‘வெயிட்டிங்' தவம் செய்த அந்த ஸ்டேஷனில் அவனுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது.

மணிமேகலை பர்ஸை திறந்து பணத்தை நீட்டினாள். அவன் வாங்க மறுத்தபோது, இவள் டிக்கெட்டைத் திருப்பிக் கொடுத்தாள். மணிக்கு பணத்தை வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

பெண்கள் கம்பார்ட்மெண்டில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த அவள், அவனையே பார்த்தாள். பாவம்! அரக்கோணத்தில் இருந்து வந்திருக்கார். மனிதர்கள் முழுவதும் சாகவில்லை. முற்றிலும் அழியவில்லை.

திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டவன் போல் 'அய்யய்யோ' என்று சொல்லிக்கொண்டே மணி வெளியே ஓடினான். பத்து நிமிடங் கழித்து திரும்பி வந்தான். ஒரு பாக்கெட்டை நீட்டினான். "இதுல மருந்திருக்கு. வேளா வேளைக்குச் சாப்பிடணும்.”

கன்னி கழிந்த குமரிபோல் சீரழிந்த பெட்டிகளை உள்ளடக்கிய துரத்துக்குடி எக்ஸ்பிரஸ் குரல் கொடுத்துக் கொண்டே நகர்ந்தது. ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு நகர்ந்த மணியின் கைகளைப் பிடித்துக்கொண்டு மணிமேகலை கண்களில் ஒற்றிக்கொண்டாள். பிறகு விம்மினாள்.