பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 ★ இல்லம்தோறும் இதயங்கள்


தற்செயலாகப் போகும் அந்த நாய் தன் குட்டிகளைத் தாக்க வருகிறது என்பதுபோல் தீப்பிழம்பு போன்ற தன் 'மூஞ்சியை' தூக்கிக்கொண்டு, முன்னாலும் பின்னாலும் நகருது. பெண்புலி தன் குட்டிகளைத் தின்ன வரும் 'கணவன் புலியை' எதிர்த்து கடைசிவரை போராடுமாமே. நான் புலியாய் இல்லாட்டாலும் பரவாயில்ல. ஒரு பன்றியாக்கூட இல்லாம போயிட்டேனே! இப்போ இந்த நிமிடத்தில் என் பிள்ளை என்ன செய்கிறானோ? யார் அடிக்கிறார்களோ ? 'என் செல்வமே! என் ராஜா ! வந்துடுறேண்டா. சீக்கிரமா வந்துடுறேண்டா!

அவளுக்கு அப்போது ஆறுதல் தேவைப்பட்டது. யாரிடமாவது சொல்லியாக வேண்டும். எவரிடமாவது அழ வேண்டும். தாங்க முடியல. தாங்க முடியாது. தாங்கவே முடியாது!

அந்தப் பக்கமாக வந்த அண்ணிக்காரிகட அவளுக்கு தன் அம்மாபோல் தெரிந்தாள். அவள் கையைப் பிடித்துக் கொண்டு "என் பையன் கண்முன்னாலயே நிக்கான் அண்ணி. இந்த வீட்ல பிறந்தவன் எந்த வீட்லயோ நிக்கான் அண்ணி. நான் இன்னும் சாகாம இருக்கேனே. இருக்கேனே...” என்று அவள் தோளில் சாய்ந்து துவண்டாள்.

அண்ணிக்காரியும், 'ஆறுதல்' சொன்னாள்.

"இந்தப் புத்தி, புறப்படுறதுக்கு முன்னால் வந்திருக்கணும். 'சித்திரப்பன் தெருவுல' என்கிறது சரியாப் போச்சி ஒன் மவன் எந்த சித்திரையில பிறந்தானோ, அதுக்கு அடுத்த சித்திரையில ஒன் அப்பாவுக்கு மாரடப்பு வந்தது. ஒனக்கு குஷ்டம் வந்தது. அப்பன துரத்தாம, அந்த அப்பன வச்சி ஒன்னையும் துரத்திட்டான். இப்போ இந்தப் பாவி மனுஷன்கூட லேசா இருமுறார். இன்னும் என்னெல்லாம் நடக்கப்போவுதோ? இருமுனாக்கூட பரவாயில்லே; கையில காலுல படை படையா வருது.”