பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 ★ இல்லம்தோறும் இதயங்கள்


படித்தேன். அப்படின்னா என் வீடு இங்கேதானா? இந்த மாந்தோப்புப் பழைய வீடுதானா? அங்கே இல்லை என்றால் அந்த அரக்கோணம் வீடும், அந்த வீட்டின் இரண்டாவது பிள்ளையாண்டானும் எனக்கில்லையா? இவ்வளவு கல்நெஞ்சம் ஒங்களுக்கு ஆகாது. அதனால இன்னும் ஒரு வாரம் இருக்கப் போறேன்' என்று சுடச்சுட எழுதுபவள் போல் அவனைக் குளிப்பாட்டி எழுதுவாள்.

இப்படி யார் பதில் போட்டது, எந்தக் கடிதத்திற்கு எந்தக் கடிதம் பதில் என்று தெரியாதபடி இருவரும் எழுதிக் குவிப்பார்கள். இப்போது அவள்கூட மூன்று லட்டர்கள்தான் எழுதினாள். அவனோ இதுவரைக்கும் பதில் போடவில்லை. பாமாவுக்கும் லட்டர் போட்டாள். அவளும் அவரின் தங்கைதானே. இந்த இந்திராதான் எழுதியிருக்கலாமே? ஒருவேளை அவளும் மறந்துட்டாளோ? இருக்காது! சிலர், பிறக்கும்போதே அன்பைச் சுமந்துகொண்டே பிறக்கிறவர்கள். அவர்கள் இறப்பது வரைக்கும் அந்த அன்பும் இறக்காது. ஜாதி மதம் கடந்த அன்பு அது. இந்த இந்திரா அவர்களில் ஒருத்தி. சரி அவளாவது எழுதலாமில்லையா? பொறுத்து பொறுத்துப் பார்த்து கடைசியில் கம்பவுண்டர் மணிக்குக் கடிதம் போட்டாள். அவனிடமிருந்து உடனடியாக வந்தது. இப்போது தான் அந்த வீட்டுக்குப் போவதில்லை என்றும் குழந்தை அழுதுகொண்டே இருந்தாலும் சுகமாக இருக்கிறது என்றும் எழுதியிருந்தான். இன்னும் தன்னைப் பற்றி விரிவாக எழுதியிருந்தான். அவள் நினைவாகவே இருக்கானாம்.

அவனுக்கு இப்போது ஒரு லட்டர் எழுதி மகனைப் பற்றி விசாரிக்கலாமா? வேண்டாம். பனை மரத்தடியில் இருந்து பால்கூட சாப்பிடக்கூடாது. அதுவும் ரயிலில் அந்தக் கிழவி அப்படிச் சொன்னபிறகு, முதல் லட்டர் போட்டதே தப்பு!