பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 ★ இல்லம்தோறும் இதயங்கள்


அண்ணன் ராமலிங்கம் 'நினைச்சிப்' பார்க்காதவன் போல் பேசினான்.

"எந்தப் பயலுவ நாலுவிதமா பேசுனது? செறுக்கி மவனுவள காலுல கிடக்கத கழட்டிக்கிட்டு அடிக்கேன் பாரு. என் வீட்ல ஆயிரம் நடக்கும். இதப்பத்திப் பேச எந்தப் பயலுக்கு உரிமை இருக்கு? யாரு சொன்னது? சொல்லு-சொல்லுமா !”

அண்ணி கனகம் நூறடி தாண்டிய கணவனை மீறி 'குதித்தாள்.'

"ஒனக்கு பொறுக்க முடியலன்னா, நீ வாங்கிக் கொடேன்? நாலுபேரு சொன்னாவளோ என்னமோ நீ நாலு பேருகிட்ட சொல்லியிருப்ப, இவ்வளவு நாளா புருஷன் ஞாபகமும், பிள்ள ஞாபகமும் இல்லாதவளுக்கு, அப்பா மேல பாசம் பொத்துகிட்டு வருதாக்கும்? இந்தப் பாவி மனுஷங்கிட்ட படிச்சிப் படிச்சி சொன்னேன், அவரு கேக்கல. நீ வந்த ஒரு வாரத்துல காலு கை ஊறுதுன்னார். பெருவியாதியா இருக்குமுன்னேன். பெரிசா கத்துனாரு இப்போ நீ வந்த புண்ணியத்துல படை படையாய் வந்திருக்கு. நாங்க. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவியாய் தவிக்கோம். நீ என்னடான்னா, இன்னிக்கோ நாளைக்கோ சாகப்போற கிழவனுக்கு அழுவுற எல்லாம் இந்த பாவி மனுஷனுக்கு வாக்கப் பட்டதால வந்த வினை. இன்னிக்கி இவருக்கு வந்தது, நாளைக்கி எனக்கும் வரும், வரத்தான் போவுது!”

கண்ட கண்ட இடங்களில் காசு கொடுத்து, பட்டைச் சாராயத்தோடு பகட்டுக்காரிகளையும், பகட்டில்லாதவர் களையும் கட்டிப்பிடித்து மேகப்படைகளை வாங்கிக் கொண்ட ராமலிங்கமும் மனைவி சொல்வது சரிதான் என்பதுபோல், அவள் தலையில் கிடந்த ஒரு தென்னங்குச்சியை எடுத்துக் கீழே போட்டான்.