பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 151


வந்தது. இவரைவிட, எவர் உசத்தியாயிடுவார்?. எவள் உசத்தியாயிடுவாள்? நம்மை கருவாய் பெற்று உருவாய் ஆக்கினவங்களைவிட அந்த உருவங்களில் மோகித்து வரும் யாரும் இணையாக முடியுமா?

என்ன நடந்தாலும் சரி, இன்றைக்கு அப்பாவுக்கு மாத்திரைகளைக் கொடுத்தாக வேண்டும்.

மணிமேகலை அப்பாவையே பார்த்துக்கொண்டு சுவரில் சாய்ந்தாள். இடையிடையே 'கூத்து' கோவிந்தன், சந்திரமதி, மகன் லோகிதாசனை பிணமாக வைத்துக் கொண்டு புலம்பியது நினைவுக்கு வந்தது. கடவுளே! என் மகனுக்கு அப்படில்லாம் ஆகக்கூடாது!

திடீரென்று காலடிச் சத்தங் கேட்டுத் திரும்பினாள். வெங்கடேசன் வந்துகொண்டிருந்தான். அண்ணன் சிறுமைப்படக் கூடாது என்பதற்காக தான் பெருமையுடன் கைவிட்ட அந்த தோழமை ஆடவன்-அவளோடு, ‘ரயில் எஞ்ஜினாக' இருந்து விளையாடியவன், கையில் மஞ்சள் தடவிய கட்டுக் காகிதங்களுடன் வந்தான். இப்போது முகத்தில் தாடியில்லை. மீசை கம்பீரமாக இருந்தது.

அவளைப் பார்க்கவே அவனுக்கு சங்கடமாக இருந்தது. எழுந்து நின்ற மணிமேகலையை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் "ராமலிங்கத்தான் இருக்காரா? எனக்கு நாளைக்குக் கல்யாணம். சிம்பிள் கல்யாணம். திருச்செந்தூர்ல தாலி கட்டிட்டு, அப்படியே மெட்ராஸ்ல பெண் வீட்டுக்குப் போறேன்" என்றான். அவள் எதுவும் பேசாமல் இருப்பதை மெளனத்தால் அங்கீகரித்துக் கொண்டே வீட்டுக்குள் போனான். ராமலிங்கத்திடம் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, ஐந்து நிமிடத்திற்குள் வெளியே வந்தான். அவளையே பார்த்தான். பிறகு ஒரு கையை ஸ்டூலில் ஊன்றி, அதில் அழைப்பிதழை வைத்து 'மிஸ்ஸஸ் ஜெயராஜ்' என்று எழுதி முடித்துவிட்டு அதனை