பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 161


இப்போது மணிமேகலையும் அந்த இருவருடன் சேர்ந்து பார்த்தபோது, அந்த உருவம்-ஆசை குலுங்க, மேனி குலுங்காமல் அமர்ந்திருந்த அந்த உருவம், அணு அணுவாகச் சாயாமல், சட்டென்று கட்டிலில் விழுந்தது. ஒரேயடியாய் ஒட்டு மொத்தமாய் விழுந்தது. தானும் அப்படியே விழக்கூடாதா என்று ஏங்கிய மணிமேகலை வெறித்துப் பார்த்தாள். உற்றுப் பார்த்தாள். தன்னைப் பெற்றவனை ‘ஏன் பெற்றாய்’ என்பது போலும் பார்த்தாள்.

எல்லோரும் அவரை நெருங்கிப் பார்த்தார்கள். கண்கள் மீண்டும் நிலைகுத்தி நின்றது. வாய் கோணிப் போய் நின்றது. கைகால்கள் ஜில்லிட்டவை போல் உணர்வின்றிக் கிடந்தன. மூக்கின் வழியாக மட்டும், லேசாகக் காற்று வந்துகொண்டிருந்தது.

மணிமேகலை புரிந்துகொண்டாள். இது மீளாத முடக்கம். மீட்க வேண்டியவர்களே, முடக்கிப் போட்ட முடக்குவாத முடக்கம். இடக்குவாத முடக்கம். இனிமேல் கண்கள் சுழலாது. கை கால்கள் ஆடாது. நீர் முட்டாது. இனி நெருப்புதான் சுடும். அந்த நெருப்பு பற்றி எரிவது வரைக்கும் இவள் அண்ணனின் மேலான அங்கீகாரத்தில், அண்ணி கொடுத்த நெருப்புக் கட்டிகளை நெஞ்சில் வைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் இனிமேல் அவள் தேவடியாள்தான். சந்தேகமே இல்லை. அடிச்சாலும், உதைச்சாலும் அரக்கோணம்தான் அவளது வீடு. இங்கே நடக்கும் ஏனோதானோ போக்குகளுக்கு சாட்சிக்காரியாய் இருப்பதைவிட அங்கே சண்டைக்காரியாகக் கூட இருக்கலாம்.

மணிமேகலை சூட்கேஸை எடுத்துக் கொண்டாள். அண்ணிக்காரி அவள் அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்பதுபோல், முன்னறையில் தான் வைத்திருந்தாள்.