பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 187


ஊருக்குத் திரும்பிய அவனை, அவள் அண்ணன் உதைக்கப் போனானாம். தம்பிக்காரன் பிடித்துக் கொண்டானாம்; அண்ணனையல்ல, இவனை! ஊர்ப்பிரமுகர்கள் எல்லோரும் இவன்தான் மணிமேகலையைக் கடத்தி ரயிலேற்றிவிட்டு மிராசுதாரின் நிலையை இப்படிக் கொண்டுவந்து விட்டுவிட்டான் என்று திட்டினார்களாம். அப்பாவிப் பெண்ணான மணிமேகலையின் மனதை மாற்றி அவள் மனதையும் கெடுத்துவிட்டானாம். இதே போல் இன்னும் எத்தனையோ பெண்களையும் கெடுத்தாலும் கெடுப்பானாம். ஊர் கெட்டுப் போகக்கூடாதாம். இவன் இருந்தால் ஒழுங்குமுறை போய்விடுமாம். உதைப்போம் என்றார்களாம். ஒடி வந்துட்டானாம். ரத்தினத்தை அடிக்க முடியாது என்பதால் அதற்கும் சேர்த்து இவனை அடிக்கப் போனார்களாம். அந்தச் சமயம் பார்த்து ரத்தினமும் ஊரில் இல்லையாம்.

மணிமேகலை அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

"என்னால ஒங்களுக்கு..."

"ஒனக்குன்னு சொல்லும்மா.. அண்ணன நீன்னுதான் சொல்லணும். நான் அதுக்காவ ஒடி வரல. ஏற்கெனவே எப்படா மெட்ராஸ் ஒடலாமுன்னு நினைச்சிருந்தேன். கெட்டும் பட்டணம் சேருன்னு சொன்னாவல்லா. ஊரு கெட்டுக்கிட்டே வந்ததுனால நான் வந்துட்டேன். கவலப் படாதம்மா. இந்த பேட்டையில நாடகக் கலைஞர்கள் நிறையா இருக்காவ. நான் வந்தால் இங்க ஒரே சண்டதான்; என் வீட்ல சாப்புடு, உன் வீட்ல சாப்புடுன்னு. வந்த நேரத்த பாருங்க. சேலத்துல ஒரு எக்ஸிபிஷன் நாடகம் பத்து நாளைக்கி, அடியேனுக்கு வில்லன் வேடம். ஒரு சினிமா ஸ்டார புக் பண்ணியிருக்கு. அவரு வராட்டா ஒரு கழுதய ஏத்தப் போறோம். அதுக்கு பின்னணி அடியேன். ‘கண்மணி படப் புகழ்’ காந்தாவ போட்டிருக்கு.