பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20 + இல்லம்தோறும் இதயங்கள்



  அவர்கள் மத்தியில், மரியாதைக்காகப் பேசிக் கொண்டிருந்த மணிமேகலை, சற்றுத் தொலைவில் நின்ற கூட்டத்தினருக்கருகே சென்றாள். குழந்தைகளுக்குக் 'கணை' வந்தால் (அதாவது மினி பிட்ஸ்) அவர்கள் வயிற்றில் சாம்பலை வைத்துக் குணப்படுத்தும் தங்கம்மா பாட்டி, அந்தக் காலத்து போஸ்ட்மேன் சண்முகம், குத்தகை நிலத்தைப் பயிரிடும் கந்தசாமியின் மனைவி காத்தாயி, பெட்டிகள் பின்னி விற்கும் ஏழை ஹரிஜனப் பெண் ராமக்கா, பவளக்கொடியாகவும், அல்லியாகவும் திரெளபதியாகவும் வேடம் போட்டு கூத்து நடத்தும் கோவிந்தன் முதலியோர் அடங்கிய அந்தக் கூட்டத்தில் யாரிடம் முதலில் பேசுவது என்று புரியாமல், எல்லோரும் ஒரே சமயத்தில் பேச, அவள் சிரித்துக்கொண்டாள்.
  "எம்மாடி... ஏ பூ... நீ போனதுல இருந்து கண்ணுக்குள்ளேயே நிக்கம்மா..."
  "கண்ணுக்குள்ள பூ விழப்படாது பாட்டி.."
  "கூத்தாடிப் பய மவன... ஒன் வேலய பாத்துக்கிட்டு போயமில..."
  "நான் குடுத்த பெட்டிய பத்திரமா வச்சிருக்கியளா அம்மா ?”
  "ஆமா... நீ குடுத்த பெட்டி... பவளக்கொடிக்கு அர்ச்சுன ராசதுரை நக நட்டு வச்சுக் கொடுத்த ரத்னப் பெட்டி பத்ரமா இருக்கும்."
  "ஒம்ம புத்திக்குத்தான் இப்டி கூத்து கீத்துன்னு உருப்படாம போறீரு... ஒம்ம வேலய பாத்துக்கிட்டு போவும்."
  "ஏழா ராமக்கா, இவனோட வேலயே எடக்குப் பேசறதுதான! நீயாவது சும்மா இரு. நாய் வால நிமிர்த்த முடியுமா?”