பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 219


 கெஞ்சும் கண்கள் போய், மிஞ்சும் கண்கள் வந்துவிட்டன. கைகள் ஒன்றை ஒன்று நெறிக்காமல், அவனை நெறிக்கப் போவதுபோல் குவிந்தும் விரல்கள் கூர்மைப்பட்டும் காட்சியளித்தன. அவன் பயந்துவிட்டான். அதனால் பலமாகக் கத்துவது என்று தீர்மானித்தான். நழுவப்போன சங்கரனை, ரத்தினம் தன் விழிகளை உருட்டியே உள்ளே விரட்டினான்.

மணிமேகலை ஆரம்பித்தாள்.

"என் பையன் எங்கே? மிஸ்டர் ஜெயராஜ், என் பையன் எங்கே?"

ஜெயராஜ் ஒரேயடியாக அதிர்ந்து போனான். மிஸ்டரா? தாலி கட்டிய மனைவி பேசுகிற வார்த்தையா? சுடச்சுட பதில் கொடுக்க வேண்டாமா?

"என் பையன் எங்க இருந்தால் ஒனக்கென்ன?”

"ஒங்க பையன்தான். எங்கேயும் இருக்கட்டும். ஆனால் எங்கே இருக்கிறான் என்கிறதை தெரிஞ்சுக்க எனக்கு உரிமை உண்டு.”

மாமியார்க்காரி மறுமொழி சொன்னாள்:

"ஒன் பிள்ளய கடிச்சித் தின்னுப்புடலம்மா. சோளிங்கர்ல கான்வெண்டோ. கருவண்டோ... அதுலதான் சேர்த்திருக்கு. நல்லாத்தான் இருக்கான். நாளைக்கு வருவான். வேணுமுன்னால் பார்த்துட்டுப் போ"

"கவலப்படாதிங்க அத்தே! நான் போகத்தான் போறேன்!”

மணிமேகலையின் மனம் இறுகியது. தன் பிள்ளையை பார்க்க முடியாமல் போய்விட்டதில் ஏமாந்த தாய்மையின் சக்தி, இப்போது கொஞ்ச நஞ்சமிருந்த தாட்சண்யத்தையும் அழித்துக்கொண்டு ஒரு கோப சக்தியாக மாறியது.