பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 ★ இல்லம்தோறும் இதயங்கள்



பைத்தியக்காரங்க இல்ல. சாம, பேத, தான, தண்டம். தண்டம் என்கிறது கொலை."

மணிமேகலை கர்ஜித்தாள்.

"நான் மட்டும் தனியா உண்ணாவிரதம் இருக்கப் போறதில்ல. பேப்பர்ல படிச்சிருப்பிங்களே அன்னை மார்க்கரெட் செத்துப் போனதாய்! அவரோட இடத்துல அந்த நிவாரண இல்லத்தை பரதன் ராமனோட பாதுகையை வைத்து ஆண்டது மாதுரி நான் நடத்துறேன். அங்கே இருக்கிற என் தாய்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவுந்தான் வந்திருக்கேன். அவங்களும் இங்க வந்து என்னோட உண்ணாவிரதம் இருப்பாங்க. சிலர் மறியல் பண்ணுவாங்க. அங்கே சாப்பாடு இல்லாமல் வெறுமனே சாகிறவங்க இங்க ஒரு லட்சியத்துக்காக சாவட்டும். உம், பதில் சொல்லுங்க! என் நகை, ரொக்கம் சொத்துல பங்கு கிடைக்குமா கிடைக்காதா? எனக்கு இப்போதே தெரிந்தாகணும்."

ஜெயராஜ் வகையறாக்கள் பயந்துவிட்டார்கள். பத்திரிகைகளில் மார்க்கரெட் மரண அனுதாபக் கூட்டத்தில் பேசியது இந்த மணிமேகலைதானா? யோசிக்காம போயிட்டோமே! எதையாவது கொடுத்து சரிக்கட்டணும். முதல்ல நகையைக் கேட்டாள். அப்புறம் ரொக்கத்தைக் கேட்டாள். இப்போ, சொத்துல பங்கு கேட்கிறாள். சீக்கிரமா விவகாரத்தை முடிச்சிடணும். இல்லன்னா லிஸ்ட் ஏறும்!

சங்கரன், தம்பியை அதட்டினான்.

"நீயும் ஒரேயடியாய் பிடிவாதம் பிடிக்கக்கூடாதுடா. ஏதோ கொடுக்கத கொடுத்து, நாமும் கஷ்டப்படுறோம். அவளும் கஷ்டப்படுகிறாள்."

மணிமேகலை ஆணித்தரமாகப் பேசினாள்: