பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 ★ இல்லம்தோறும் இதயங்கள்


அப்பால் கொண்டு போய்விட்டால் அவை ‘அப்பல்லோ’ வேகத்தில் மேலோங்கும். “மண்ணுள்ளார் பண்ணிடும் புண்ணியக் குறைவுகளை” படம்பிடித்து அல்லவை போக்கி நல்லவை சிறக்க அந்த நல்ல காரியங்களே காரணங்களாகவும் மாறும்.

இந்த அரிய உண்மையை அறிந்துகொண்டவள் போல் மணிமேகலை பம்பரமாகச் சுழல்கிறாள். இப்போது இரண்டு தொழிற்கூடங்கள் இயங்குகின்றன. ஐந்து தையல் மிஷின்கள் இருக்கின்றன. உணவுப் பொருட்கள் வண்டி வண்டியாக வருகின்றன. எல்லோரும் அந்த இளம் பெண்ணைத் தாயாகப் பாவித்து ‘அம்மா’ என்கிறார்கள். வேலைக்காரர்கள் சொல்லும் விதத்தில் அல்ல; பெற்ற பிள்ளைகள் விளிக்குமே அப்படி!

அன்னை மார்க்கரெட் அருளில்லம் என்ற புதிய பெயர்ப் பலகையில் அந்த மாதாவின் படம் மகிழ்ச்சியுடன் சிரிக்கிறது. அரசாங்க அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும், சமூக நிறுவனங்களையும் சந்தித்து இல்லத்தின் நிலையை எடுத்துக் கூறி, அதை இப்போது எல்லோரும் அனிச்சையாகவே பாராட்டும்படி செய்து விட்டாள். தனது நகைகளை விற்று கணவன் வீட்டில் கிடைத்த பணத்துடன் சேர்த்து சகோதரர்களுடன் போராடிக் கிடைத்த கிராமத்துச் சொத்தையும் இதனுடன் கூட்டி எல்லாவற்றையும் இந்த இல்லத்தின் பெயருக்கே அவள் எழுதி வைத்துவிட்டதால் பத்திரிகைகள் அவளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுகின்றன.

அவளது முன்னுதாரணம் பல பின்னுதாரணப் பேர்வழிகளையம் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அரசு மான்யம் கூடியது. சமூக நிறுவனங்கள் தாராளம் காட்டு கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஏழை எளியவர்கள் ‘எங்கள் இல்லம்’ என்கிறார்கள். காமாட்சியின் கணவர் மூலம் நடிக நடிகையர்கள் ‘நல்ல’ நன்கொடை கொடுத்தார்கள். சொன்னபடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.