பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எண்கள்

98

எனினும் எக்ஸ்-கதிர்களால் எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டபோதிலும் அதனால் சில தீங்குகளும் நேரவே செய்கிறது. எக்ஸ்-கதிர்கள் உடலில் உள்ள திசுக்களை அழிக்கும் வல்லமை உள்ளவைகளாகும். உடலில் ஏதேனும் கட்டிகள் ஏற்பட்டால் அதைக் கரைக்க எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்துவதுண்டு. அதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுள் பாயும் எக்ஸ்-கதிர்கள் புண்ணை ஏற்படுத்தி விடுகிறது. சிலசமயம் எக்ஸ்-கதிர்களைப் பாய்ச்சுபவரும் பாதிப்புக்கு ஆளாகிறார். இதற்காக எக்ஸ்-கதிர் கருவியை இயக்குபவர் அதற்கென உள்ள பாதுகாப்பு அங்கியை அணிந்து கொள்கிறார். அத்துடன் தங்கள் உடலையும் அடிக்கடி சோதித்துக் கொள்வர்.

எடிசன், தாமஸ் ஆல்வா : மிகக் குறைந்த காலத்தில் மிக அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார். இவர் பல்துறைப் புலமையாளராகவும் புத்தமைப்பு வல்லுநராகவும் விளங்கியவர்.

இவர் அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாநில மிலான் நகரில் 1847ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் மூன்று மாதங்கள் மட்டுமே முறையாகப் பள்ளியில் கல்வி கற்றார். இவர் தன் இளமைதொட்டே புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதிலேயே நாட்டமுடையவராக விளங்கினார். இதனால் எப்போதும் எதைப் பற்றியேனும் சிந்தித்துக் கொண்டே இருப்பார். இதை உணராத இவர் ஆசிரியர் இவரை மூளை வளர்ச்சி குன்றியவர் எனக் கருதினார். இதனால் இவர் பள்ளிக் கல்வியைத் தொடராது பள்ளியிலிருந்து வெளியேறிவிட்டார்.

தாமஸ் ஆல்வா எடிசன்

எனினும், தமது புத்தமைப்புச் சிந்தனையையும் புதியவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியையும் ஆய்வையும் நிறுத்தவில்லை. ஏழ்மை வாழ்வும் இவரைப் பின்தொடர்ந்ததால் ஆங்காங்கே சிறுசிறு வேலைகளைச் செய்து வருவாய் தேடும் அதே நேரத்தில் தம் புதியன கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தார். அதன் விளைவாகப் புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்தார். மின்விளக்கு, திரைப்படம், தொலைபேசி, இசைத்தட்டுக்கருவி, தட்டச்சுப்பொறி முதலான இன்றைய வாழ்வின் இன்றியமையாக் கருவிகளாக அமைந்துள்ளவற்றைக் கண்டுபிடித்தவர் இவரே. இவர் தந்தி முறையைத் திருத்தமான முறையில் மாற்றியமைத்தார். இவர் தன் வாழ்நாள் முழுமையும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி உலகுக்கு வழங்கிக் கொண்டே இருந்தார்.

சோதனைக்கூடத்தில் எடிசன்

அவற்றின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாகும்.

எண்கள் : மனிதன் என்றைக்கு எண்களைக் கண்டுபிடித்தானோ அன்று முதல் அவன் அறிவு வளர்ச்சி துரிதமடையத் தொடங்கிவிட்டது. எது அதிகம் எது குறைவு என்பதை ஒப்பிட்டு அறிய எண்கள் அவசியமாயிற்று. தன்னிடமுள்ள ஆடு மாடுகளோ பொருள்களோ பெருமளவில் பெருக்கமடைந்தபோது அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிட்டறிய