பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வைட்டமின்

303

எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும். வாகனச் சக்கரத்துடன் சுற்றக் கூடிய சுழல் காந்த வட்டு அமைக்கப்பட்டிருக்கும். அதோடு சுழலும் சக்கரத்தின் சுழற்சியை காந்தத்திற்கும் கடத்தவல்ல வளையும் தன்மையுள்ள எந்திரத் தண்டும் பொருத்தப்பட்டிருக்கும். இஃது நாலா பக்கமும் வளைய வல்லதாகும். வாகனம் விரைந்து செல்லும்போது சக்கரங்கள் வேகமாகச் சுழலும். அப்போது காந்தமும் சுழலும். அப்போது வட்ட முகப்பில் எண்களைக் காட்டும் முள் நகர்ந்து வாகனத்தின் வேகத்தைக் காட்டும். வாகனம் ஓடாதபோது சக்கரம் சுழலாது. அதனால் காந்தமும் சுழலாது. அப்போது முள் 0 காட்டும் அவ்வேகமானி தட்டின் நடுப்பகுதியின் மேலாக அவ்வாகனம் எத்தனை கிலோ மீட்டர் சென்றுள்ளது என்பதைக் காட்டும் அமைப்பும் இருக்கும். கீழ்ப்பகுதியில் வாகனம் புறப்படும் முன் உள்ள அமைப்பில் 0 வைத்தால் போய் வந்த தூரத்தை அறிந்து கொள்ளமுடியும்.

சாலையில் செல்லும் வாகனங்களில் இருப்பது போன்ற வேகமானி அமைப்பு வானில் செல்லும் விமானத்துக்கும் கடலில் செல்லும் கப்பலுக்கும் இல்லை. அவற்றின் வேகத்தை அளக்க வேறு வகையான அமைப்புகள் உள்ளன.

ஒவ்வொரு வாகனத்துக்கும் வேகமானி இன்றியமையாது தேவைப்படும் ஒன்றாகும். நெரிசல் சாலைகளிலும் போக்குவரத்து மிகுந்த சாலைகளிலும் போக்குவரத்து சீராக நடைபெற வேகக் கட்டுப்பாட்டு விதிகளை அரசு விதித்துள்ளது. அவ்வேகத்தில் அளவுக்குள் வாகனத்தை ஒட்டிச் செல்ல வேகமானி உதவுகிறது. வேகமானி இல்லையெனில் எவ்வளவு வேகத்தில் வாகனத்தைச் செலுத்துகிறோம் என்பது தெரியாமலே போய்விடும். அதனால் ஆபத்தும் விதிகளை மீறிச் சென்ற குற்றமும் ஏற்பட்டுவிட ஏதுவாகிவிடும். எனவே, வேகமானி வாகனத்திற்கு இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.


வேதியியல் : 'கெமிஸ்ட்ரி' என ஆங்கிலத்தில் அழைக்கும் இதனை 'இரசாயனவியல்' என்று கூறுவதும் உண்டு.

மனிதன் என்றைக்கு வேறுபட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கலந்து புதியதோர் பொருளைப் பெற முயன்றானோ அன்றே வேதியலுக்கு அடிப்படை அமைக்கப்பட்டுவிட்டதெனலாம். பண்டைய மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளைத் தயாரிப்பதிலும் தாங்கள் அறிந்திருந்த உலோகங்களை கலந்து புதுவகை உலோகங்களைப் பெறுவதிலும் வேதியியலே பெருந்துணை புரிந்துள்ளது. இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஒரு புதிய பொருளைப் பெறுவதே வேதியியலின் அடிப்படைக் குறிக்கோளாகும்.

வேதியியல் காலங்காலமாக வளர்ந்துவந்த போதிலும் அது முறைப்படுத்தப்பட்ட தனித் துறையாகக் கடந்த சில நூற்றாண்டுகளாகத் தான் வளரத் தொடங்கியது. அதன் நவீன வளர்ச்சிக்குக் காரணமாயமைந்தவர்கள் பாயில், கேவண்டிஸ், லவாய்சியர், மெண்டல், கியூரி தம்பதியர் ஆகியோர் ஆவர். இவர்களும் இன்னும் சிலருமே வேதியியலில் மிகப் பெரும் ஆய்வுகளை நிகழ்த்தி பலப்பல புதிய உண்மைகளைக் கண்டறிந்து கூறியவர்கள்.

இன்றைக்கு நாம் வண்ண வண்ண அழகான டெரிலின், நைலான், நைலெக்ஸ் உடைகள் அணிந்து மகிழ்கிறோமே அதற்குக் காரணம் வேதியியல் கண்டுபிடிப்புகளேயாகும். நாம் அன்றாட வாழ்வில் விதவிதமான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துகிறோமே அவை அனைத்தும் வேதியியலின் விளைவுகளேயாகும். இன்னும் மருந்துகள், செயற்கை உரங்கள் வகைவகையான சோப்புகள் போன்ற அனைத்துமே வேதியியல் ஆராய்ச்சியின் விளைவாகப் பெற்ற பொருட்களேயாகும்.

வேதியியல் துறையின் வளர்ச்சி இன்று வியக்கத்தக்க அளவில் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. பல்வேறு பிரிவுகளாகக் கிளைத்து வளர்ந்து வருகிறது. கரிம வேதியியல் (Organic Chemistry), கனிம வேதியியல் (Inorganic Chemistry), மின் வேதியியல் (Electro Chemistry), உயிரியல் வேதியல் (Bio Chemistry) ஆகியன அவற்றுள் சிலவாகும்.

தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களைத் தரமுள்ளதாகத் தயாரிக்க அவ்வப்போது ஆய்வு செய்ய வேதியியல் சோதனைக் கூடங்களை அமைப்பதும் உண்டு.


வைட்டமின் : 'வைட்டமின்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'ஊட்டச் சத்து’ என்பது தமிழில் பொருளாகும். நாம் அன்றாடம் உண்