பக்கம்:ஈச்சம்பாய்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

121


அந்த எதிர்பாராத செய்தியை அவள் கேள்விப்பட்டாள். வெளியேயிருந்து வந்த அப்பா கருப்பசாமி, கக்கத்தில் இருந்த குடையை வீசியடிக்காமல், கால் செருப்புக்களைத் தூக்கி எறியாமல் இதமாக வந்ததிலிருந்தே, அம்மா புரிந்து கொண்டு ‘காரியம் பழந்தானே’ என்றாள். அவர் லேசாய்ச் சிரித்தார். அதற்காகவே, அவருக்கு பரிசளிக்க விரும்பியதுபோல், அம்மா உள்ளே போய், மோர் கொண்டு வந்தாள். அப்பாவோ, கருத்த மீசைக்கு நரை நிறத்தைக் கொடுத்த மோர்த்து துளிகளைத் துடைக்காமலே, மனைவியிடம் விஷயத்தைச் சொல்லப் போனார். பிறகு அதட்டினார்.

“மொதல்ல உன் மகள உள்ளயாவது... வெளியிலயாவது போகச் சொல்லு...”

“அவள் கிடக்காள்... பையன் எப்படி...”

“உனக்கு புத்திகெட்டுப் போச்சுடி.. அவளுக்குத் திமுறப் பாரேன். காலம் கலிகாலம். அது நம்ம வீட்டுக்கும் வந்துட்டா...”

“ஏனா எருமைமாடு... அப்பா சொல்லுறது காதுல விழலே... ஒன் சோலியப் பாத்துட்டுப் போயேம்ளா. முடிச்சாச்சா...”

“முடிச்சாச்சு... இன்னுமாளா நிக்கே...”

கருப்பசாமி, மகளை பல்லைக் கடித்துப் பார்த்தார். அவளும் ‘எனக்கும் தெரியட்டுமேப்பா’ என்பதுபோல் கால்களைத் தேய்த்தபடி நின்றாள். பிறகு ‘எனக்குத்தான் தெரியணும்’ என்பதுபோல் நிலைப்படியில் உள்ள சீப்பை எடுத்து, சிறிது தள்ளி நின்று, ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்தபடியே தலையை வாரினாள். அவர்களோ அவளை ‘வாருவது’போல் திண்ணையிலிருந்து எழுந்து, சமையலறைக்குள் போய் விட்டார்கள். இவளுக்கும் வீம்பு வந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/123&oldid=1371703" இலிருந்து மீள்விக்கப்பட்டது