பக்கம்:ஈச்சம்பாய்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

19



தங்களுக்குள்ளேயே மூழ்கியிருப்பதைப் பார்த்த தைரியத்தாலோ அல்லது சுவாரஸ்யத்தாலோ, அவை சற்றே நெருங்கி ஒரு திட்டில் ஒட்டுமொத்தமாக அமர்ந்தன. மனிதக் காதலால் பாதிப்பு ஏற்பட்டதுபோல், சில 'சின்னஞ் சிறிசுகள்' இறக்கைகளை ஆட்டிக் கொண்டன. அலகுகளால் இடித்துக் கொண்டன.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவனும் அவளும் புறப்பட்டார்கள்.

மானுடக் காதல் வியாதி தூக்கணாங் குருவிகளில் ஆண்களைத் தொத்திக் கொண்டது, அப்பட்டமாகத் தெரிந்தது. பெண் குருவிகளிடம் 'வாலாட்டின'. இதில் இரண்டு, மூன்று ஆண்கள் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. சண்டை ஓய்ந்ததும் எல்லா ஆண் குருவிகளும், தலைக்கு ஒன்றாகப் பெண் குருவிகளை இடித்தன. ஆனால் பெண்களோ, கால்களால் தத்தித் தத்தித் தாவி விலகிப் போயின.

'ஒரு கூடு கட்டத் துப்பில்ல. காதல் வாழுதாக்கும்.. மொதல்ல கூடு கட்டு, அப்புறம் வாரேன்...

ஆண் குருவிகள் புரிந்து கொண்டன. எல்லாப் பெண் குருவிகளும் தன்னை மட்டுமே நம்பி இருப்பதாக ஒவ்வோர் ஆண் குருவியும் நினைத்துக் கொண்டு பிறகு 'ச்சூ ச்சூ ச்சோச்' என்று போர்க் கீதம் இசைத்தபடியே நான்கு திசைகளிலும் சிதறிப் பறந்தன.

சிறிது நேரத்தில் ஆண் குருவிகள் கால்களில் தேங்காய் நார், பனை நார், இலை நரம்புகள் முதலியவற்றைப் பற்றியபடி, அலகுகளில் ஈச்சம் இலை, கவ்வியபடி வந்தன. அனைத்தும் ஆவேசமாக இயங்கின. காதல் ஆவேசம்.... இப்போது கூடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/21&oldid=1495612" இலிருந்து மீள்விக்கப்பட்டது