பக்கம்:ஈச்சம்பாய்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

உரைகல்

தமிழறிஞர் - முனைவர். இரா. இளவரசு

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இதழ்சார் இலக்கியமே. இதழியல் நீக்குப் போக்குகளைக் கருத்தில் கொண்டு எழுதப்படும் கதைகள் இதழ்களின் பண்பு நிலைகளுக்கு ஏற்ப அமைவதை உணர முடியும். இதழ் நடத்துவோரின் விருப்பு வெறுப்பு, எதிர்பார்ப்பு முதலியவை எழுத்தாளனின் படைப்பு உரிமையில் பங்கு கொள்கின்றன. ஓர் எழுத்தாளனே, ஓர் இதழில் எழுதும் கதைக்கும் பிறிதோர் இதழுக்கு எழுதும் கதைக்கும் வேறுபாடு காண முடியும். எழுத்துக்களின் தரத்தை வரையறுப்பதில் இதழ்களும் பங்கு பெறுவதைத் தவிர்க்க முடியாது. இந்தத் தொகுப்பில் இடம் பெறும் சிறுகதைகள், இருபதாண்டுகளில் (1978-1998) பல்வேறு இதழ்களில் எழுதப்பெற்றவை. இதழ் நடத்துவோரின் கூட்டல், குறைத்தல், தலைப்பு மாற்றங்களுக்கு இவையும் உள்ளாகி இருக்கலாம். ஆனால் இந்தக் கதைகள் நூல் வடிவில் வரும்போது, தன் விருப்பத்திற்கு ஏற்பத் திருத்தியமைக்கும் வாய்ப்பு படைப்பாளிக்குக் கிடைக்கிறது.

பயன்பாட்டு இலக்கியம்

மக்கட் பெருங்கடலுள் இரண்டறக் கலந்து 'மானிட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். எழுத்தாளர் சமுத்திரமும் இந்த மனித நேயக்குரலைத் தனது எழுத்துக்களில் இடைவிடாது எழுப்பிக் கொண்டு வருபவர். 'எழுத்து என்பது சுவையுணர்ச்சிக்குச் சொந்தமானது; இன்பம் பயப்பதே அதன் இறுதி நோக்கம்' என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர். நூல் என்பது 'மாந்தரின் மணக்கோணல்களை மாற்றியமைக்க வேண்டும். அறம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/6&oldid=1495089" இலிருந்து மீள்விக்கப்பட்டது