பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

ஈரோடு மாவட்ட வரலாறு


1937 தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கதிற்காக மேடையெங்கும் 'ஓட்டுடையீர் எல்லாம் கேட்டிடுவீர்' என்று அடானா ராகத்தில் பாடிப் பிரச்சாரம் செய்தவர் கொடுமுடி கே.பி. சுந்தராம்பாள், கொடுமுடி கே.எம். மகுடபதி இல்லத்திற்கும் சுந்தராம்பாள் இல்லத்திற்கும் 11.2.1934 அன்று காந்தியடிகள் வருகைபுரிந்தார். 'பிரிய சகோதரி' என்று தமிழில் எழுதி காந்தியடிகள் சுந்தராம்பாளுக்குக் கடிதம் எழுதினார்.

கூகலூர் கே.கே. சுப்பண்ண கவுண்டர் தன் வீட்டுக்கிணற்றை தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திறந்துவிட்டு தேசியப்பணியாற்றி "கூகலூர் காந்தி" எனப் பெயர் பெற்று காந்தியடிகள் போலவே உடையணிந்தார். கொடுமுடி எம்.சுப்பையா "சோட்டா காந்தி" என்று அழைக்கப்பட்டார். கோபி லட்சமண ஐயர், கருக்கம்பாளையம் எம்.எம். ஆயண்ணன், பாப்பம்பாளையம் ப.வை. கந்தசாமி, சாவடிப்பாளையம் புதூர் ஆர். முத்தப்பன், சாமிநாதபுரம் பொன்னுசாமி, ஈரோடு வி.பி. குருசாமி போன்ற ஈரோடு மாவட்டம் சார்ந்த சுமார் 400 பேர் விடுதலைப் போரிள் வேராகவும் விதையாகவும் விளங்கினர்.

ஈரோடு எம்.ஆர். கமலவேணி. எம். பங்கஜத்தம்மாள், கொடு முடி அலமேலுமங்கை, சத்தி முத்துலட்சுமியம்மாள், கோபி.கே.எஸ. லட்சுமியம்மாள் போன்ற பல பெண்களும் விடுதலைப் போரில் முன்னின்றனர்.

9.4.1927இல் டி. சீனிவாசமுதலியார் நகராட்சித் தலைவராக இருந்தபோது காந்தியடிகள் சிலையை கவர்னர் வைக்கவுண்ட் கோஷன் அவர்களைக் கொண்டு திறக்கச் செய்தார். 1.10.1939இல் மற்றொரு சிலை ஆர்.கே.வெங்கிடுசாமி காலத்தில் ஓ.பி. ராமசாமி ரெட்டியாரால் திறக்கப்பட்டது.

தந்தை பெரியார்

பெரியார் ஈ.வெ. இராமசாமி ஒரு சமூகப் புரட்சியாளர். உறுதியான பகுத்தறிவாளர். சுய சிந்தனை மிக்கவர். எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்த மனித நேயத்தின் உறைவிடம்.