பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

ஈரோடு மாவட்ட வரலாறு


வீரசோழ பட்டன், விக்கிரமசோழ பட்டன் என்று அரசர் பெயருடன் பட்டப் பெயர்களையும் வைத்துக் கொண்டதைக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. மற்றும் சிலர் தங்களை "சோழிய பிராமணர்" என்றும் அழைத்துக் கொண்டனர்.

தேவாரத் திருமுறைகளையும் சைவமரபு வரலாறுகளையும் ஈரோடு மாவட்டப்பகுதி மக்கள் 11-13 ஆம் நூற்றாண்டுகளில் நன்கு உணர்ந்திருந்தனர். இது

தடுத்தாட் கொண்டான், பிறைசூடும் பெருமாள்,
சேரமான் தோழன், நம்பி நல்லமங்கை பாகன்,
சிறுதம்பி நம்பியாரூரன், சொக்கன் ஆலாலசுந்தா நம்பி
கொன்றைவார் கடையன், எடுத்தகை அழகியான்

என ஆண்கள் பெயராலும், மங்கயைர்க்கரசி, சடைமேலிருந்தாள் என பெண்கள் பெயராலும் அறியலாம்.

சிவ பிராமணர்கள் சைவ சூடாமணி, சைவ சக்கரவர்த்தி, சைவ புரந்தரச் சக்கரவர்த்தி, சமய மந்திரி என்று குறிக்கப்பட்டுள்ளனர். சிவ பிராமணர் தங்கள் கோயில் இறைவன் பெயரைச் சிலர் வைத்துக் கொண்டனர். பால்வண்ணத்தான் (பால் வெண்ணீசுவரர் - பட்டாலி} பச்சோட்டு அய்யன் (பச்சோட்டு ஆவுடையார் - மடவளாகம்) என்பதைக் கல்வெட்டில் காண்கிறோம்.

ஒலகடம், கண்ணபுரம் போன்ற பல ஊர்களில் முருகன் "குன்ற மெறிந்த பிள்ளையார்" என்று கூறப்பட்டுள்ளார். கோயில் மடவளாகத்தில் வயிராகிகள், தபசியர் இருந்ததாக இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பாவம்-புண்ணியம், சொர்க்கம்-நரகம், மறுபிறப்பு என்ப வைகளில் நம்பிக்கை இருந்தது.

“தீங்கு நினைத்தவன் கங்கைக் கரையில் காராம்
பசுவைக் கொன்ற பாவத்திலே போவான்"
"இத்தருமம் அல்ல என்றவன் மறுசென்மத்துக்கும்
நரகத்துக்கு நாற்றங்கால் ஆவான்”

என்பவை கல்வெட்டுத் தொடர்கள்.