பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

ஈரோடு மாவட்ட வரலாறு


கிணறு அல்லது கூவல் செல்வாக்குடைய தனியார் வெட்டியதால் அவை பெரும்பாலும் கல்வெட்டுக்களில் அதிகமாகப் பயின்று வரவில்லை. கூவலூர், காஞ்சிக்கூவல், கொல்லன் கூவல் என்ற ஊர்ப்பெயர்களில் கிணறு (கூவல்) கூறப்படுகிறது.

விளைவிக்கின்ற பயிர்கள் வான்பயிர். புன்பயிர் என இரு பெயரால் அழைக்கப்பட்டன. வான்பயிர் நன்செய் பயிர்கள், புன்பயிர் புன்செய் பயிர்கள். கரும்பு, தெங்கு, வாழை, பலா, மா, என்பவை வான்பயிராகவும் கம்பு, சோளம், ராகி, வரகு, சாமை, பயிறு வகைகள் பருத்தி, எள் புன்பயிர் என்றும் கூறப்பட்டன. நெல் மிகவும் குறைவாகவே பயிரிடப்பட்டது. ஈரோடு மாவட்டப் பகுதியில் கம்பு விளைச்சலே மிக அதிகமாக இருந்தது. கோயில் கொடையாகவும், தேசாந்திரி பிராமணர் உண்ணும் சத்திரங்கட்ருக் கொடுக்கும் பொருளாகவும் அரசுக்கு இறையாகவும் கம்பு அளிக்கப்பட்டதாக பல கல் வெட்டுக்கள் கூறுகின்றன. நெல் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட வர்கள் குளத்தில் போதுமான நீர் இல்லாத காலங்களில் நெல்லுக்குப் பதிலாகக் கம்பு கொடுத்தனர். "குளம் எத்தாத நாள் நெல்லுக்குப் பதிலாகக் கம்பு கொடுப்போம்" என்று முருங்கத்தொழுவுக் கல்வெட்டுக் கூறுகிறது.

அரசிறையாகவோ, கோயிலுக்கோ, கொடுக்கும் நெல்லை 'கல், பதர், செத்தை, மடி, முளை. ஈரவாசி நீக்கி” தூய நெல்லாகக் கொடுத்தனர். விளையிலும் விளையாது ஒழியிலும் காஞ்சாலும் பேஞ்சாலும் ஊர்கேடு போனாலும் கொடுப்போம் எனக் கோயில் நிலத்தை உழுபவர்கள் கூறியுள்ளார்கள்.

இக்கால வேளாண்மை

வேளாண்மை வளர்ச்சி முயற்சிகள்

கூட்டுறவு இயக்கத்தின் மூலம் இன்றைய விவசாயம் பெரும் பயனடைகின்றது. ஐரோப்பாக் கண்டத்தில் கூட்டுறவு இயக்கம் பரவலாக நடைமுறையில் இருந்தது. 1892ஆம் ஆண்டு சர் பிராடரிக் நிக்கல்சன் கூட்டுறவுத் தனி அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர்