பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

ஈரோடு மாவட்ட வரலாறு


இசையுலகில் மிகப் புகழ் படைத்து ஔவையாராக நடிக்க முதன் முதலில் திரைப்பட உலகில் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய கொடுமுடி கே.பி. சுந்தராம்பாள் 'தமிழ் இசை வாணி' என்று இசையுலகில் பெயர் பெற்ற ஊஞ்சலூர் யு.ஆர். ஜீவரத்தினம் ஆகியோர் பல திரைப்படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றவர்கள். ஜீவரத்தினம் பாடிய "தென்றலே வாராயோ இன்பசுகம் தாராயோ" என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது.

ஈரோடு சௌந்தர், தாராபுரம் சுந்தரராஜன், கள்ளிப்பட்டி ஜோதி, அந்தியூர் ராஜகுமாரன் ஆகியோர் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளனர். 'ஆயிரம் நிலவே வா' என்பன போல பல திரைப்படப் பாடல்களை இயற்றிய புலவர் புலமைப்பித்தன் (இராமசாமி) ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஈரோடு தமிழன்பன் ஒரு திரைப்படத்திற்குக் கதை வசனமும் பாடல்களும் எழுதியுள்ளார். 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற திரைப்படத்திற்கு பாடலும் எழுதியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் கம்புளியம்பட்டியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விஜய் அமிர்தராஜ். ஆனந்த அமிர்தராஜ் சகோதரர்கள் ஆங்கிலத் திரைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். ஈரோடு நகர்மன்ற உறுப்பினராக இருந்த என்.எஸ். நாராயணபிள்ளை பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார், திரைப்பட முன்னணி நடிகர் சிவக்குமாரின் பூர்வீக ஊர் காங்கயம் வட்டம் காடையூர் ஆகும். பலர் திரைப்பட வினியோகம் செய்கின்றனர். இன்றும் பல முன்னணி இசைக்குழுக்கள் ஈரோட்டில் உள்ளன.

நவரசம் குமரசாமி, உழவன் பெரியசாமி போன்றோர் பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளனர். கிராமப்புறக் கோயில் பண்டிகைகளில் உள்ளூர் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்.