பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

227


தீப்பு கல்தான் காலத்தில் 'இந்து, முஸ்லிம்' என இரு நடுவர் சேர்ந்து வழக்குகளை விசாரித்தனர். அவர்கள் முறையே 'க்வாசி', ‘பண்டிட்' எனப்பட்டனர். கொங்கு நாட்டுப் பாளையக்காரர்கள் வரி கொடுக்காதவர்கள் தாராபுரம், சங்ககிரியில் சிறைவைக்கப்பட்டனர். ஐதர் காலத்தில் குற்றம் புரிவோரைத் தண்டிக்க ஆங்காங்கு 200 பேர் சவுக்குடன் இருப்பர். கிழக்கிந்தியக் கும்பினிக் காலத்தில் 'கோர்ட்டுகள்" ஏற்படுத்தப்பட்டன. 1804முதல் கோவை மாவட்டத் தலைநகராக இருந்தாலும் மாவட்ட நீதிமன்றம் 1828 வரை தாராபுரத்தில் இருந்தது. பெரும்பாலும் வழக்குகளை நிர்வாக அதிகாரிகளே விசாரித்தனர். பின்னர் நீதியும் - நிர்வாகமும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது. இப்போது கூட முக்கியமான குற்றவியல் நிகழ்ச்சிகளை 'வருவாய்த்துறை அலுவலர்' விசாரித்து அறிக்கை அனுப்பும் வழக்கம் உண்டு.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உயர்ந்த சட்டக்கல்வி இங்கிலாந்தில் “பாரிஸ்டர்-அட்-லா" என்று அளிக்கப்பட்டது. இலண்டனில் உள்ள 'பிரிவி கவுன்சில்' என்ற மன்றம் தான் இந்தியாவின் இறுதி நீதிமன்றமாக இருந்தது.

15,8,1947இல் விடுதலை பெற்ற நாம் சட்ட மேதை அம்பேத்கர் தலைமையில் சட்ட வல்லுநர் குழுவை அமைத்து நமக்கென தனி அரசியல் சட்டத்தை உருவாக்கி 26.1.1951 முதல் அமுல்படுத்தி வருகிறோம். அந்த அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயே குற்றம் பதிவு செய்வதும் விசாரிப்பதும் தீர்ப்பளிப்பதும் நடைபெறுகிறது. சட்டம்படித்த வழக்கறிஞர்களைத் தவிர சாதாரணப் பொதுமக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி எதுவுமே தெரியாத நிலை பெரும்பாலும் உள்ளது. "144 தடைச்சட்டம்" தவிர வேறு எந்தச் சட்டமும் சட்டத்தின் பிரிவும் மக்களுக்குத் தெரியாது.

ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் அதிகார எல்லை உண்டு. கிராமம், நகரம், தாலுக்கா, மாவட்டம் என்ற படி நிலையில் காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 49 காவல் நிலையங்கள் உள்ளன. 1229 காவலர்களும் 242 ஆயுதப்படைக் காவலர்களும் மாவட்டத்தில் உள்ளனர்.