பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

233


சமூதாயத்திலும் சிலர் பட்டக்காரர் என அழைக்கப்பட்டுள்ளனர். வேட்கோவர் சமுதாயத்தில் ஈரோடு, ஊத்தலூர், தாராபுரம் ஆகிய ஊர்களில் பட்டக்காரர்கள் உள்ளனர். வெள்ளோடு உலகுடையான், மூலனூர்த் தொண்டைமான், வள்ளி எறிச்சில் தொண்டைமான், பூந்துறை நண்ணாவுடையார் போன்றவர்கள் மதிப்புமிக்க ஆளும் தலைவர்கள்.

வலங்கை இடங்கைப் பிரிவு

இவ்விரு பிரிவுகள் பற்றி செங்குந்தர் வெற்றிப் பட்டயம், ஆசாரிகள் வெற்றிப்பட்டயம், மல்லிகுந்தம் பட்டயங்கள் ஆகியவை முழுமையாகக் கூறுகின்றன. சேவூர்ப்பட்டயம், கன்னிவாடிப் பட்டயம். மோரூர் காங்கேயர் ஏடு, வேலூர்ச் செப்பேடு ஆகியவற்றில் சில குறிப்புக்கள் வருகின்றன. ஒரு சமூகத்திற்கு உரியதாக அறிவிக்கப்பட்ட சில பழக்கவழக்கங்கள், உரிமைகளை மற்ற சமூகத்தார் கையாளும் போது எழுவதே வலங்கை-இடங்கைப் பிரிவு வழக்கு ஆகும். ஆளும் தலைவர்கள் “பூர்வம் தீர்ந்த பட்டயம்" பார்த்துத் தீர்ப்பளிப்பர். தோற்றவர்கள் அபராதமும் வென்றவர்கள் வெற்றிக்காணிக்கையும் அளிக்க வேண்டும்.

ஆசாரிகள் (தட்டார், கொல்லர், கன்னார், தச்சர், சிற்பியர்) செங்குந்தர், கம்பளத்தார், தேவேந்திரப்பள்ளர், நகரத்தார், மாதாரிகள், வன்னியர் ஆகியோர் இடங்கைப் பிரிவாகவும், கவறைச் செட்டிகள், சாணார், சேனியர் இவர்கள் வலங்கைப் பிரிவாகவும் கொங்கு ஆவணங்களில் கூறப்படுகின்றனர். 1799இல் கூட இவ்வழக்கு கொடுமுடியில் ஏற்பட்டதாகவும் இதனை பவானி கலெக்டர் மேக்ளியாட் தீர்த்து வைத்தார் என்றும் கோவை மாவட்டக் கையேடு கூறுகிறது.

மக்கள் பெயரமைப்பு

11-13ஆம் நூற்றாண்டு கொங்குச் சோழர், கொங்குப் பாண்டியரின் ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்களிலிருந்து அக்கால மக்கள் பெயர் அமைப்பு எவ்வாறிருந்தது என்பதை அறிய முடிகிறது.

ஆடவர்கள் பெற்றோர் வைத்த பெயர். அரசன் முதலியோர் கொடுத்த சிறப்புப் பெயர் ஆகியவற்றோடு சமய நம்பிக்கையுடன்