பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஈரோடு மாவட்ட வரலாறு


சத்தியமங்கலம் கோட்டத்தில் 145530.92 எக்டேரும், ஈரோடு கோட்டத்தில் 83230.65 எக்டேரும் காடுகள் உள்ளன. சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் குடியாலத்தூர், குடியாலத்தூர் விரிவு, உல்லே பாளையம், பாரபெட்டா, தலைமலை, அக்கூர்ஜோரை, அக்கூர் ஜோரை விரிவு, நீலகிரி கீழ் சரிவு, விளமுண்டி ஆகியவையும், ஈரோடு வனக் கோட்டத்தில் நகலூர், எண்ணமங்கலம், பர்கூர் தெற்கு, பர்கூர் வடக்கு, தாமரைக்கரை, அறச்சலூர், வெள்ளிக்கரடு, வாய்ப்பாடி, சென்னிமலை, கொங்கம்பாளையம், அட்டமலை, தளவாய்பட்டினம், ஊதியூர், பெரியமண்மலை ஆகியனவும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதிகள் ஆகும்.

சிவமலை, வட்டமலை, திருமண்கரடு. மலைப்பாளையம் மலை, எழுமாத்தூர் மலை, எட்டிமலை, அரசண்ணாமலை, திண்டல் மலை, பெருமாள் மலை, ஊராட்சிக்கோட்டை மலை, பருவாச்சி மலை, தவளகிரி, பச்சைமலை, பவளமலை, அருள்மலை, திட்டமலை, ஒழலக்கோயில் மலை, சுதித்தமலை, அணியரங்கமலை, குட்டிக்கரடு. விஜயகிரி, புஷ்பகிரி ஆகியவை பிறமலைகள் ஆகும்.

மலைக்காடுகளை சந்தனமரக்காடுகள், விறகுக் காடுகள், மூங்கில் காடுகள், பெருமரக்காடுகள், சிறுவனப் பொருள் காடுகள் என 5 வகைகளாகப் பிரிப்பர். சந்தன மரங்களால் அரசுக்குப் பெரிய அளவில் வருமானம் வருகிறது. மேட்டூர் சந்தன எண்ணெய் ஆலைக்குச் சந்தன மரங்கள் அனுப்பப்படுகின்றன. காகித ஆலைக்கு மூங்கில்கள் அனுப்பப் பட்டன. இப்போது காகித ஆலையினர் வேறு மரங்களையும் பயன் படுத்துகின்றனர்.

மலைகளில் மரங்கள் குறைவதால் பருவமழை குறைகிறது. இயற்கை ஆர்வலர்கள் மரங்களையும், காடுகளையும் பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர். வனத்துறை வெட்டும் மரங்களுக்கு ஈடாகவும், பிற மரங்களையும் நட்டு மரங்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.