பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

7. சங்க காலம்


(கி.மு. 800- கி.பி.250)

மதுரையில் தமிழ்ச்சங்கம் இருந்ததை "மதுராபுரிச் சங்கம் வைத்தும் மாபாரதம் தமிழ்ப்படுத்தும்" என்ற பாண்டியர் பழஞ்செப்பேட்டாலும், "கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்" என்ற மாணிக்கவாசகர் கூற்றாலும், பிறவற்றாலும் அறிகின்றோம். மற்றொரு சங்கப் பாடல் "மாங்குடி மருதன் தலைவனாக" சங்கம் இருந்ததைக் குறிக்கிறது, கலித்தொகையில் ஒரு பாடல் இளவேனில் காலந்தை “நான் மாடக் கூடலார் புலவர்கள் நாவில் புதிது உண்ணும்பொழுது" என்று சுட்டுவதால் இளவேனில் காலமாகிய இரு மாதங்கள் தமிழ்ச் சங்கம் மதுரையில் கூடியதாக அறிகின்றோம்.

கால்நடைச் செல்வம்

"ஆகெழு கொங்கர் நாடு", "கொங்கர் ஆ பரந்தன்ன", "கொங்கர் படுமணி ஆயம்" ஆகிய சங்க இலக்கியத் தொடர்கள் கொங்கு நாட்டின் சங்ககாலக் கால்நடைச் செல்வத்தின் மிகுதியைக் குறிக்கிறது. கொங்கு நாட்டில் ஈரோடு மாவட்டப் பகுதியே கால்நடைச் செல்வத்தில் அன்றும் - இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது. "காங்கயம்", "பர்கூர்" இனங்கள் ஈரோடு மாவட்டத்தின் சிறப்பான கால்நடை இனங்கள் ஆகும்.

தலைவர்கள்

சங்ககால ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் பெருந்துறை வட்டம் ஈங்கூரைச் சேர்ந்தவன். புன்றுறை, கொடுமுடி என்ற கொங்குத் தலைவர்கள் பெயரை அகநாநூறு கூறுகிறது. "பூந்துறை". "கொடுமுடி" ஆகிய ஊர்கள் அவர்கள் பெயரால் வழங்கப் பெறுபவை. 'கீரன்' என்ற பெயர் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வருகிறது. காங்கயம் வட்டத்தில் 'கீரனூர்' என்ற தொன்மையான ஊர் இருப்பது குறிப்பிடத்தக்கது.