பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

10. கொங்குச் சோழர் காலம்


(கி. பி. 942-1304)

ஈரோடு மாவட்ட வரலாற்றில் வேளாண்மை, வணிகம், சமயம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் உன்னதமான காலம் கொங்குச் சோழர் ஆட்சிக்காலமேயாகும். ஏறக்குறைய கி.பி.942 முதல் 1304 மூடிய சுமார் மூன்றரை நூற்றாண்டுக் காலம் அவர்கள் ஆட்சி புரிந்துள்ளனர்.

இருக்குவேளிர் வழியினர்

அவர்கள் சோழப் பேரரசின் இளைய வழியினர்; சோழரின் பிரதிநிதிகள் அல்லது ஆணையாளர்கள்; சோழர் படைத்தலைவன் கொட்ட மண்டல நாதன் அப்பிரமேயன் வழியினர்; சேரர் மரபினர், கொடும்பாளூர் இருக்குவேளிர் தலைவர்கள்; முத்தரையர்கள் என்ற பல கருத்துக்கள் உள்ளன.

ஆனால் கே.வி. சுப்பிரமணிய அய்யர், வி. மாணிக்கம் ஆகியோர் அவர்கள் கொடும்பாளூர் இருக்குவேளிர் வழியினர் என்று ஆய்ந்து கூறும் கருத்தே வலிமை பெறுகிறது. முதல் மூன்று அரசர்கள் தங்களை 'கோநாட்டான்' என்றே அழைத்துக் கொள்கின்றனர். 'கோனாடு' என்பது இருக்குவேளிர் பகுதியே. கொங்கு நாட்டை வென்ற பேரரசுச் சோழரின் பிரதிநிதிகளாக அவர்கள் ஆட்சியைத் தொடங்கியதால் 'கொங்குச் சோழர்' என அழைக்கப்படுகின்றனர். சோழரைப் போலவே இவர்களும் இராசகேசரி, பரகேசரி என்ற பட்டப் பெயர்களை ஏற்றுள்ளனர். இவர்களின் தலைநகர் தாராபுரம் என்று பெயர் மருவிய பண்டைய இராசராசபுரம்.

சோழர் ஆட்சி

சோழப் பேரரசன் முதல் ஆதித்தன் (870-907) கொங்கு நாட்டை வென்றதாக "கொங்கதேச ராராக்கள்" நூல் குறிப்பிடுகிறது.

முதலாம் ஆதித்த சோழன் மகன் முதலாம் பராந்தகனின் (907-955) 15ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஈரோட்டில்