பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


தமிழுக்குத் தொண்டாற்றலாம்-எந்தெந்த வழிகளில் தமிழ் நாட்டுக்குப் பணியாற்றலாம் என்று எண்ணி அந்தந்த நேரங்களில் அருந்தொண்டாற்றியவர்.

இசைக் கச்சேரியில் பலவிதமான இசைவகைகளை ஏற்ற இறக்கத்துடன் பாடினாலும் சுதிக்குள்ளே நின்று பாடுவது போல் தமிழ்த் தொண்டுக்குள் நின்று பல துறைகளில் தொண்டாற்றியவர்.

மேல் நாடுகளில் ஒருவர் ஒரு புத்தகம் எழுதினால் அந்த ஒரு புத்தகத்தில் வரும் வருவாயைக் கொண்டே தன் வாழ்நாளைச் செப்பனிடும் அளவுக்கு வசதியிருக்கிறது.

ஒருவர் எழுதிய புத்தகத்தின் வருவாயைச் செலவழிப்பதற்காக அதுவும் ஓராண்டு காலம் ஓய்விலிருந்து அதைச் செலவழிப்பதற்காகத் தென்னமரிக்காவில் சென்று வாழ்ந்தாராம்.

இங்கு ஒருவர் ஒரு புத்தகம் வெளியிட்டால் உடனே வேறு வீட்டிற்குக் குடிபுக வேண்டியதிருக்கிறது, கடன் தொல்லைக்காக!

பன்மொழிப் புலவருக்கு மணிவிழா கொண்டாடுகிறோம்--ஆனால் அவரது கருத்துக்கள் நம்மிடம் இருக்கிறதா என்றால் இல்லை. திரு. வி. கவைப் பற்றிய--மறைமலையடிகளாரைப் பற்றிய குறிப்புக்கள் இல்லை. அவர்களது குறிப்புக்களை மறந்துவிட்டால் மரபு என்பது கிடைக்காது. மரபு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மறதியென்று ஆகிவிட்டது. மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் நம்மிடமில்லை.

ஏதேனும் ஒரு புத்தகத்தில் கரிகாலனைப் பற்றியே செய்தி வருகிற இடத்தில் ஒரு நட்சத்திரக் குறியிட்டிருப்பார்கள்.