பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவர் காண விரும்பிய
நாடு


"பரம ஏழைகளும் இது தங்கள் நாடு என்று எண்ண வேண்டும். அதன் அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிறது என்று அவர்கள் நினைக்கவேண்டும். மக்களில், உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதே இருக்கக் கூடாது. எல்லாச் சமூகத்தினரும் அன்யோன்யமாய் வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன்."

இதுவே, உலக உத்தமர் காந்தியாரின் இலட்சியம், என்று அறிவிக்கிறார் பண்டித நேரு.

ஒரு நாடு, அன்னியரிடம் அடிமைப்பட்டு, விடுதலைப் போர் தொடுத்து, பிறகு தன்னாட்சி பெறுவது. மகத்தா தோர் சம்பவம் -- உலக வரலாற்றில். ஒவ்வொரு சமயம். படைபலத்தாலோ இராஜதந்திர பலத்தாலோ, ஏதேனும் ஒரு நாடு பிறநாடுகளை அடிமைகொள்வதும், அடிமைபட்ட நாட்டின் செல்வத்தைச் சுரண்டுவதும், உலக வரலாற்றிலே எங்கோ ஓர் மூலையிலே காணப்படும் சிறு விஷயமல்ல -- அந்த வரலாற்றிலே மிக முக்கியமான பகுதியே, இந்தச் சம்பவத்தைக் கொண்டதுதான்.