உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக உத்தமர் காந்தி

59



மூழ்கிவிட்டால், நஷ்டமும் மனக் கஷ்டமும் நெஞ்சை வெந்திடச் செய்யுமல்லவா? அதுபோல காந்தியாரைக் கயவன் கொன்றபோது, அவருடைய மனதிலே அருமையான திட்டங்கள் நாட்டுக்கு நலன்தரும் புதியமுறைகள் ஊசலாடிக் கொண்டிருந்தன. அதை எண்ணும்போதுதான் எவ்வளவு பெரிய நஷ்டம் இந்தச் சம்பவம் என்பது விளங்குகிறது.

விடுதலைபெற்றுத் தந்ததோடு வேலை முடிந்தது என்று அவர் முடிவுகட்டவில்லை. நாட்டை மீட்க வேண்டும் -- நல்லாட்சி அமைக்கவேண்டும் -- மக்களை நல்லவர்களாக்க வேண்டும் -- வீரம், தீறம், விவேகம் மூன்றையும் விரும்பினார். மக்களை நல்லவர்களாக்க வேண்டும் என்பதே அவருடைய இறுதி இலட்சியம். நல்ல மனிதர்களால்தான் நல்லாட்சி நடத்தமுடியும். நாட்டுக்கு விடுதலையும் கிடைத்து மக்கள் நல்லவர்களாகாமல், கொலைபாதகர்கள், கொள்ளைக்காரர்கள். ஆதிக்க வெறியர்கள், ஆள் விழுங்கிகள், ஆஷாடபூதிகள் ஆகியோரின் ஆதிக்கம் அழிந்துபடாதிருந்தால், விடுதலையான் என்ன பலன்? வேடனிடமிருந்து மீட்டுவந்த புள்ளிமானை வேங்கையின்முன் துள்ளி விளையாட விடுவதா?

இதை எண்ணினால், நாடு விடுதலை பெற்றதும் நல்லாட்சி அமைக்கும் வழிவகை கூறி, அந்தப் பொறுப்பை உடனிருந்தோரிடம் தந்தார்; மக்களை நல்லவர்களாக்கும் நற்பணி புரியலானார்.

நல்ல மனிதர்களெல்லாம் திடீர் திடீரென்று பொல்லாத செயல் புரியக் கிளம்பியது கண்டார்; மனம் மிக நொந்தார்; மனிதனுக்குள் இருக்கும் மிருகம் வெளிப்படக் கண்டு, மிகவும் வேதனைப்பட்டார். இந்தச் சூழ்நிலையை மாற்றியாகவேண்டும். என்று தீர்மானித்து பணி புரியலானார். அந்த அரும்பணியாற்றுவாயிலே தான் அநியாயமாய்க் கொல்லப்பட்டார்.