பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராப்பகல் அற்ற இடம்

43

அதற்குமேல் ஒரு படி கட்டி, முருகப் பெருமானுடைய புகழை வைத்துக் காட்டுகிறார்.

தேனும் ஒன்றைப் பாராட்ட வேண்டுமானால் அந்தத் துறையில் வல்லவர்கள்தாம் பாராட்டவேண்டும். சங்கீதம் தெரியாதவன் கழுத்துச் சுளுக்கத் தலையை ஆட்டினாலும் அதனால் பயன் இல்லை. உண்மையாக இசையின் சுவை தெரிந்தவன் நயம் தெரிந்து தலையை ஆட்டினால் அதற்குப் பொருள் உண்டு. கலைஞர்களுக்கும் மகிழ்ச்சி உண்டாகும். முதலையைக் கொன்று கசேந்திரனைக் காப்பாற்றிய பெருவீரராகிய திருமால் முருகப்பெருமானுடைய பராக்கிரமத்தைப் போற்றுகிறார். இதனால் முருகப்பெருமானுடைய பராக்கிரமத்தின் பெருமை நன்கு விளங்குகிறது.

பராக்கிரமம்

றைவனுக்கு இரண்டு வகை ஆற்றலுண்டு: அருள் நிரம்பிய பல திருவிளையாடல்களைச் செய்வது; வீரம் காட்டி அல்லாதவர்களை அழிப்பது.முதலில்சொன்னதைத் திருவிளையாடல் அல்லது லீலை என்றும், பின்னால் சொன்னதைப் பராக்கிரமம் என்றும் சொல்வார்கள். இரண்டும் ஆண்டவன் அருட் செயல்களே. ஆனால் முன்னது நயமாகத் தோன்றுகிறது; பின்னது பயமாகத் தோன்றுகிறது. இரண்டையும் முறையே அறக் கருணை, மறக்கருணை என்று சொல்வார்கள். அறக் கருணை அநுக்கிரகம்; மறக்கருணை நிக்கிரகம். அநுக்கிரக நிக்கிரகமாகிய இரண்டும் ஒரு வகையில் இறைவன் பராக்கிரமத்தைச் சொல்லும். இங்கே முருகப்பெருமான் எல்லோரையும் விடச் சிறந்த பராக்கிரமம் உடையவனாக இருக்கிறான். அவன் கையில் அவன் பராக்கிரமத்திற்கு அடையாளமாக வேல் விளங்குகிறது.