பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 67



சமூகம் முழுவதும் வறுமையின் பிடியில் சிக்கிக் கொள்கிறது.

உழைப்பவனை வஞ்சித்து ஒரு சிலர் செல்வத்தை முடக்கிக் கொள்வது, சமூகத்தையே நாளாவட்டத்தில் பாழாக்கிவிடுகிறது; அதனால்தான், அது சமூக விரோதச் செயலாகிறது.

அத்தகைய சமூக விரோதிகளும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளவர்களும், ஒருநாள் கூடி, உழவர் திருநாள் உழைப்போரின் திருநாள். என்று கொண்டாடுவது, ஏமாந்தவனைச் சேற்றிலே தள்ளிவிட்டு, அவன் மீது சிறிதளவு பன்னீர் தெளிப்பது போன்றதாகும்; புண்ணின் மீது புனுகு பூசுவது போன்றதாகும்; கண்ணைக் குத்திவிட்டு கைக்குக் காப்புப்போடுவது போன்றதாகும். குன்மம் போக்க மருந்து தராமல், அவன் முன் குழல் ஊதி, இனிமையைப் பெறு என்று கூறுவது போன்றதாகும்.

உழைப்பவன் இன்று கேட்பது நீதி! உழைப்பின் பெருமைபற்றிய சிந்து அல்ல! உழைப்பவன் இன்று கேட்பது வாழ்வு பொருளற்ற புகழுரை அல்ல.

அவன் ஏழை! அவன் வாழ விரும்புகிறான்!
அவன் ஏழை! அவன் நீதி கேட்கிறான்!
அவன் ஏழை ! உண்மையை உணர்ந்து கொண்டான்!
அவன் ஏழை ! வாழ்வுக்காகப் போராடுகிறான்.
அவன் ஏழை! உரிமைக்குரல் எழுப்புகிறான்!
அவன் ஏழை! ஆனால் அவன் உழைப்பே, செல்வம் என்பதை அறிந்து கொண்டுவிட்டான்.
அவன் ஏழை! விழித்துக் கொண்டுவிட்டான்;
அவன் கேட்பது வாழ்வு! ஏமாற்றும் விழா அல்ல!
உரிமைத் திருநாள் காணவிழைகிறான், ஊராள்வோர், உழவர் திருநாள் நடத்தி அவனை மயக்கிட முடியாது.