பக்கம்:எக்கோவின் காதல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

எக்கோவின் காதல் ❖ கவியரசர் முடியரசன்


அத்தான்! அத்தான்! என்று என் மனைவி என்னை எழுப்பினாள். உறக்கம் கலைந்து எழுந்தேன். “ஏன் இப்படி உளறுகிறீர்கள். ஏதோ கண்ணா , கண்ணா , என்று சத்தமிட்டீர்களே. குசேலர் நினைவோ? கோவிலுக்குப் போகாதே என்று எனக்கு அறிவுரை சொல்லிவிட்டு நீங்கள் இரவில் அந்தரங்க பஜனை செய்கிறீர்களோ?” என்று கிண்டல் செய்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

“அந்தக் கண்ணனை நான் அழைக்கவில்லை. என் நண்பன் கண்ணனும் நானும் நேற்று மாலை கடற்கரையில் அவன் கவிதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உணர்ச்சி - உள்ளத்துடிப்பு நிறைந்திருந்தது அக் கவிதைகளிலே. நாட்டு மக்களைத் தட்டி எழுப்பிச் சமதர்மத்தின் வழியிலே அழைத்துச் செல்வது அவன் பாடல். அவற்றை வெளியிட . மறுத்தான். நான் எப்படியும் அவற்றை நாட்டிற்கு அளிக்க எண்ணினேன். அதே சிந்தனையில் உறங்கிவிட்டேன். அவனைப்பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தேன். நீ எழுப்பிவிட்டாய்”

“எப்படிக் கனவு கண்டீர்கள்?”

கனவைக் கூறினேன். அவளும் சிரித்தாள். நானும் சிரித்தேன்.