பக்கம்:எங்கே போகிறோம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலட்சிய சமுதாயம் 131

மனிதன் தனியே வாழ்ந்துவிட முடியாது. அவன் பலருடன் கூடி வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதனால், கூடிவாழ்கிறான். அதனால், அப்படிக் கூடி வாழ்வது அன்பின் அடிப்படையில், உறவுகளின் அடிப்படையில் இல்லை. நாடகம் நடத்துகிறான்; சுயநலத்திற்காகவும், பயத்திற்காகவும் கூடிவாழ்வதைப்போல நடித்து வாழ்கின்றான்.

அவன் அன்புடன் கூடிய உறவு வாழ்க்கையை-கூடி வாழ்தலைப் பெரும் பேறாகக் கருதுவதில்லை. இத்தகைய மனிதக் கூட்டத்தில் அன்பு, கடைச் சரக்கேயாம்.

நம்முடைய நாட்டில் இன்னமும் சமுதாயம் உருவாகவில்லை. “ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும்” என்ற சமுதாய நியதி, ஒழுங்கு, ஒழுக்கம் வெற்றி பெற்றால்தான் சமுதாயம் உருவாகும். இன்று மனிதகுலத்தை வருத்தும் தீமைகளை எதிர்த்துப் போராடவேண்டுமாயின், முதலில் சமுதாய அமைப்பு உருவாக வேண்டும். அங்ஙனம் ஒரு சமுதாயம் திடீரென்று உருவாகிவிடாது. ஒரு இலட்சியம் தோன்றினால்தான் சமுதாயம் உருவாகும்.

இன்று. நம்பிக்கையும் நல்லெண்ணமும் நிறைந்த ஒரு இலட்சிய நோக்கமுடைய சமுதாயத்தைக் காண்பதற்கு, தடைகள் பலப்பல உள்ளன. அவற்றுள் தலையாயது பணம்!

அடுத்த தடைகள் அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீயபண்புகள்! இத்தீய பண்புகளின் படைக்கலன்களாக உள்ளவை பூட்டுக்கள், களவு-காவல், சுவர்கள், வேலிகள் பட்டங்கள், பதவிகள் முதலியன. இவையெல்லாம் ஒருங்கிணைந்துகொண்டு சமுதாயம் அமைத்தற்குரிய