பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

உலக ஒளி


அவர், அன்றோர் நாள், தென்னாட்டுக்கு வந்திருந்த நேரத்தில், நானும் என்னைச் சார்ந்த இயக்கத்தினரும் ராமாயண எரிப்பு கிளர்ச்சியிலீடுபட்டிருந்தோம். அதை பற்றி, அவரிடம் குறிப்பிட்டபோது, உத்தமர் குறிப்பிட்ட வார்த்தைகளை தேசிய நண்பர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் சொன்னார்--

"நான் கூறும் ராமன் வேறு ! ராமாயணத்தில்--வால்மீகியும் கம்பரும் வர்ணிக்கும் ராமன் வேறு ! என்னுடைய ராமன் சீதையின் புருடனல்ல; தசரதரின் மகனுமல்ல; இராவணனைக் கொன்றவனுமல்ல; அவன் அன்பின் சொரூபம் ! உண்மையின் உருவம்" என்று விளக்கினார்; அப்போது நான், திராவிட நாடு இதழில் தீட்டினேன்--'எரியிட்டார்! என் செய்தீர்?'--என்று.

இதுபோல அவருடைய அடிப்படைக் கொள்கைகளை அலசிப் பார்த்ததால்தான், அவருடைய எண்ணங்களும் எனது இயக்கத்தின் அடிப்படை ஆசைகளுக்குமிடையே ஒற்றுமைகளிருப்பதைக் கண்டோம். அதனால் தான் காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டதும் எனது இயக்கத் தலைவர் பெரியார், ஒரு அறிக்கை விடுத்தார்.

"இந்த நாட்டின் பெயரை, இந்தியா என்பதற்குப் பதில் காந்தி நாடு என்றழையுங்கள் 'இந்து மதம்' என்பதற்குப் பதில் ' காந்தி மதம்' என்று மாற்றுங்கள்--இவ்வண்ணம் செய்தால், ஏற்கத் தயார்!' என்று கூறினார். யார், முன் வந்தார்கள்? இன்றிருக்கும் காங்கிரஸ் தலைவர்களைக் கேட்கிறேன். யார் ஏற்றுக் கொண்டார்கள் ?

அதுமட்டுமா ? காந்தியார் அடிக்கடி சொன்னார்- 'உண்மையே, என் கடவுள்' என்று, இதனை யார்