பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

எட்டு நாட்கள்


ஒரு வேளை பகைபட்டுவிட்டது போலும்--ஒரு வேளை நமது கொள்கையை ஆதரிப்போரின் தொகை இத்தாலியில் வளர்ந்துள்ளது போலும்--இல்லை என்றால் தன் மகனுக்குத் தத்துவ ஆசிரியராக இருக்கும்படி ஏன் அந்தச் சீமான் அழைக்கப்போகிறார், என்று எண்ணினாரோ என்னவோ ! ஏமாந்துவிட்டார். புற்றருகே அமர இசைந்து விட்டார்.

வெனிஸ் நகர் ! கடலலை தழுவும் கோட்டைச் சுவர் உள்ள அழகிய மாளிகை ! ப்ரூனோ அங்கு தங்கி, தமது அருந்திறனை அள்ளி அளித்துவந்தார் சீமான் மகனுக்கு. வெள்ளியை உருக்கிவார்க்கும் நிலவு போல அவர் அறிவு புகட்டிவந்தார் வாலிபச் சீமானுக்கு--ஆனால், அவன் மனதிலே அறிவு புகவா செய்தது--அவன் முன் ஏற்பாட்டின்படி ப்ரூனோ சொன்னதை எல்லாம் மதவிசாரணைக் குழு அலுவலரிடம் ஒவ்வொருநாளும் ஒப்புவித்துக் கொண்டிருந்தான்--குற்றப்பத்திரிகை தயாராகிக் கொண்டிருக்கிறது ப்ரூனோமீது.

"அகண்ட வெளியின் அழகினைக் காண் இளைஞனே ! இயற்கையின் எழிலைப் பாரப்பா ! என்ன கவர்ச்சி ! எவ்வளவு நேர்த்தி ! வீசும் காற்று, கீதமாக இல்லையா வாலிபனே. உற்றுக் கேள் ! கடலலையைக் கண்டால் எத்துணை மாட்சிமை தெரிகிறது. இந்த இயற்கை அழகைக்கெடுக்க அழுகும் கற்பனைகளை, கட்டுக்கதைகளைக் கட்டிவைத்திருக்கிறார்களே கபடர்கள் " என்றெல்லாம். பாகுமொழியில் பகுத்தறிவைக் கூறிவந்தார் ப்ரூனோ. எப்போதுமே, ப்ரூனோவுக்கு இயற்கை அழகைக்கண்டு களிப்பதிலே அளவற்ற இன்பம். ஆண்டு பலவாக அவர், மாளிகைகளிலே சிற்சில காலம் தங்கிக் கிடந்தாலும் பெரும் பகுதி நாடு விட்டு நாடு சுற்றித்திரியும் நிலையிலே இருந்ததால், இயற்கை-