பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

347

நான் இயற்றிய பாடல்கள்

கட்டளைப்படி நான் செய்த முதற்காரியம் என் ஆசிரியர் இயற்றிய விருத்தத்தையும் கீர்த்தனத்தையும் பாடிக்காட்டியதே.

“துங்கஞ்சார் தருதுறை சையில்வளர்
     சுப்பிர மணிய தயாநிதியே
துன்றும்பே ரருள்நனி பொழிதரு
     சுத்தமெய்ஞ் ஞான கலாநிதியே”

என்பது அந்த இங்கிலீஷ் நோட்டின் பல்லவி. அக்கீர்த்தனம் பெரியதாதலின் நிதானமாகவும் என்னால் இயன்றவரையில் நன்றாகவும் பாடிக்காட்டினேன். தேசிகர் கேட்டு மிகவும் மகிழ்ச்சியுற்றார். மடத்திலுள்ளவர்களும் பலமுறை கேட்டு இன்புற்றனர். ஓதுவார்கள் அக்கீர்த்தனத்தைப் பாடம் செய்து ஒவ்வொரு நாளும் சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையிலே பாடி வரலாயினர். தேசிகருக்கு என்னிடம் சினம் உண்டாயிற்றென்பதன் அறிகுறியே எனக்குத் தெரியவில்லை. என்னிடம் வழக்கம்போலவே அவர் ஆதரவுகாட்டி வந்தார்.

ஆசிரியரது உள்ளப் பெட்டி

விரைவில் திருப்பெருந்துறைப் புராணத்தை நிறைவேற்ற வேண்டுமென்று சுப்பிரமணியத் தம்பிரான் தேசிகருக்குக் கடிதம் எழுதியிருந்தார். பிள்ளையவர்களிடம் தேசிகர் அவ்விஷயத்தைத் தெரிவிக்கவே ஆசிரியர், “விரைவிற் புறப்பட்டுச் சென்று புராண அரங்கேற்றம் ஆரம்பிக்க வேண்டும்” என்று அன்புடன் சொல்லலானார். புராணத்தில் படலங்களே ஆகியிருந்தன. “முழுவதும் இயற்றிய பின்புதானே அரங்கேற்ற வேண்டும்” என்று நான் நினைத்தேன். பிறகு பிள்ளையவர்களது வழக்கம் எனக்குத் தெரியவந்தது. ஒரு புராணத்தை முற்றும் இயற்றிப் பிறகுதான் அரங்கேற்ற வேண்டுமென்ற நியதி அவருக்கு இல்லை. புராணத்தின் பிற்பகுதிகளை இயற்றிக்கொண்டேயிருப்பார்; முற்பகுதிகளை அரங்கேற்றுவார். சில சமயங்களில் அன்றன்று முற்பகலில் பாடல்களை இயற்றிப் பிற்பகலில் அரங்கேற்றுவதும் உண்டு. பெட்டி நிறையப் பணம் வைத்துக்கொண்டிருப்பவன் எந்தச் சமயத்திலும் வேண்டிய தொகையை எடுத்துச் செலவழிப்பதைப் போல அவர் எந்தச் சமயத்தில் நினைத்தாலும் தம் உள்ளப் பெட்டியைத் திறந்து வேண்டிய கவிகளை எடுத்து வெளியிடும் நிலையில் இருந்தார். அப்பெட்டியைத் திறப்பதற்குரிய திறவுகோலாகிய உத்ஸாகம் மாத்திரம் அவரிடம் இருக்க வேண்டும்; அப்பொழுது அவரிடத்திலிருந்து புறப்படும் கவிதை வெள்ளத்தை யாரும் தடை செய்யவே முடியாது.