பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

என் பார்வையில் கலைஞர்



அவர் ஒரு முழக்கத்தைத் தாயகத் தமிழர்களிடையே வைக்க வேண்டும் என்று வாதாடினேன். கலைஞர், நான் தெரிவித்தவற்றை உன்னிப்பாகக் கேட்டார். மறுத்தோ அல்லது ஏற்றுக் கொண்டோ, அவர் பதிலளிக்கவில்லை.

கலைஞரிடம் இருந்து இருபது நிமிடங்களுக்குப் பிறகு, நான் கண்ணீர் மல்க விடை பெற்றேன். என்னுடைய மகள் திருமணத்திற்கு அவர் வர வேண்டும் என்றும் வற்புறுத்தினேன். அன்று வெளியூரில் இன்னொரு திருமண நிகழ்ச்சி உள்ளது என்று கலைஞர் அப்போதே தம் இயலாமையைத் தெரிவித்து விட்டார். இயலாமை என்று அவர் சொன்ன போது, புதுடில்லி தமிழ் சங்கத்தில் கலைஞர் முதல் தடவை முதல்வராக இருக்கும் போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியே நினைவுக்கு வருகிறது.

பேராசிரியர் சாலை. இளந்திரையன் டில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் ஒரு ‘பெரிய சமுத்திரம்’. மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவார். நானே மிகையானது என்கிற அளவிற்குப் பேசக் கூடியவர். ஆனாலும், டில்லியில் கறுப்புத் தமிழர்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர். பிராமணர்களாலும் நேசிக்கப்பட்டவர். டில்லித் தமிழர்களுக்கு சொற்பொழிவு என்று வந்துவிட்டால், அவர்தான் அதாரிட்டி. தனிப்பட்ட முறையில் நல்லவரான இவர் தலைமையில், டில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கலந்து கொண்டார். அப்போது கலைஞர் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று சொல்லி விட்டதாக சாலையார் தம் தலைமையுரையில் இடித்துரைப்பது போல் பேசினார்.

பொதுவாக, கலைஞர் எந்தக் கூட்டத்தில் பேசினாலும், யாராவது ஒருவருக்கு செல்லக் குட்டு வைக்கவில்லை என்றால் அவருக்கு நிறைவு இருக்காது. சாலையாருக்கு ஒரு தமிழ்க் குட்டு வைப்பதில் அவர் மகிழ்ந்திருக்க வேண்டும். இறுதியில் பேசிய கலைஞர், சாலையாரிடம் இயலாது என்று சொன்தாகவும், முடியாது என்று சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டார். பின்னர், இயலாமைக்கும் முடியாமைக்கும் உள்ள வேறுபாடுகளை விலாவாரியாக விளக்கினார். இப்போது கூட நான் பிறாிடம் இந்த மாதிரிப் பேச வேண்டியது இருந்தால், இயலாது என்று சொல்வதா... முடியாது என்று சொல்வதா... என்று முன்கூட்டியே யோசிப்பது உண்டு.