பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

மங்கல வாழ்த்து

புகாரில் கோவலன் கண்ணகிக்கு நிகழ்ந்த நிகழ்ச்சியைப் புகார்க் காண்டம் எனவும், மதுரையில் நிகழ்ந்த நிகழ்ச்சியை மதுரைக் காண்டம் எனவும், வஞ்சியில் நிகழ்ந்த நிகழ்ச்சியை வஞ்சிக் காண்டம் எனவும், சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவர்.

புகார்க் காண்டத்தில் முதற் பிரிவு மங்கல வாழ்த்துப் பாடல் என்பதாகும். அதன் தொடக்கத்தில் வாழ்த்தும் வணக்கமும் என்ற பகுதியில் சோழன் வெண்கொற்றக் குடைபோல் உலகளித்தலால் திங்களையும், அவன் திகிரி[1] போல் மேருமலையை வலம் வருவதால் ஞாயிற்றையும், அவன் அளிபோற் சுரத்தலால் மாமழையையும், அவன் குலத்தோடு உயர்ந்து விளங்கலால் புகாரையும் போற்றுகிறார் ஆசிரியர். திங்கள், ஞாயிறு, மழை, புகார் இவற்றைப் போற்றுவதோடு, சோழன் ஆட்சிச் சிறப்பையும் புகழ்ந்து கூறுகிறார்.

வானத்துச் சுடர் இரண்டையும் கூறுங்கால் ஞாயிற்றை முதலிலும், திங்களை இரண்டாவதும் கூறுவது மரபு. ஆனால் இளங்கோவடிகள் திங்களை முதற்கண் வைத்தும் ஞாயிற்றை இரண்டாமிடத்தில் வைத்தும் முறைமாற்றிக் கூறுகிறார். அவ்வாறு கூறக் காரணம் யாது? என நோக்குதல் வேண்டும்.

காப்பியந் தொடங்கும்பொழுது முதலில் மங்கலச் சொல் வருதல் வேண்டும் என்பது காப்பிய மரபு. ஆதலின் ‘இத்தொடர் நிலைச் செய்யுட்குச் சிறந்த மங்கல மொழியாகலின் திங்களை முதற்கூறினார்’ என அடியார்க்கு நல்லார் உரைப்பர். இஃது ஒருபுறமிருக்க நாம் வேறுவகையாற் பார்ப்போம்.

பொதுவாகத் தன்னேரில்லாத் தலைவன்தான் காப்பியத்துள் முதன்மை பெறுவது வழக்கம். அவ் வழக்கத்துக் கேற்பச் சிலப்பதிகாரத்தில் கோவலன் முதன்மை பெறுதல் வேண்டும். ஆனால், அவனுக்கு முதன்மை தரப்படவில்லை. ஏன்? அவன் தன்னேரில்லாத் தலைவனாகப் படைக்கப்படவில்லை. ஈகையாலும், அழகாலும், தோற்றத்தாலும் மேற்பட்டவனாக அவன் காட்சியளிப்பினும் ஒழுக்கக்-


  1. திகிரி - ஆணை