பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

முடியரசன்


ஒல்லையூர்ப் பகுதியிலே முல்லைக்கொடிகள் பூத்துக் கிடக்கின்றன. புலவர் பார்வையில் அம் மலர்க் கொடிகள் தென்படுகின்றன. அக்கொடிகளோடு பேசத் தொடங்கிவிடுகிறார். அவலம் அவரைப் பேசச் செய்கிறது. “முல்லையே! ஒல்லையூரிலே நீ பூக்கின்றாயா? சாத்தன் மாய்ந்த பிறகும் பூக்கின்றாயா? ஏன் பூக்கின்றாய்? நீ பூக்கும் மலரை யார் சூடிக் கொள்ளப் போகிறார்கள்? இளைய வீரர் சூடாரே! வளையணிந்த மகளிரும் பறிக்க மாட்டாரே! பாணனும் தன் யாழின் கோட்டால் வளைத்துப் பறித்துச் சூடானே! பாடினியாவது அணிந்து கொள்வாளா? அங்கு அவளும் அணியாளே! அனைவருமே அவன் பிரிவால் கலங்கிப் போயிருக்கின்றார்களே! ஒருவருக்கும் பயன்படவில்லை என்றால் வீணாக நீ ஏன் பூக்கின்றாய்? அவனையிழந்து நான்தான் கொடியேனாய் வாழ்கின்றேன்; நீயும் கொடியைதானோ? அவன் பிரிவு உனக்குத் துயர் தரவில்லையா? தந்திருப்பின் உனக்கேன் மலர்ச்சி? வீரன் மாய்ந்தான் - வள்ளல் மாய்ந்தான்; நீ பூக்கலாமா?” என்று தம்மை மறந்து பேசுகின்றார் புலவர்.

முல்லை தன்னியல்பால் பூக்கிறது. இவர் அவலத்தால் செயலற்ற நிலை அடைகிறார். அவலத்தோடு இணைந்துவிடுகிறார். அதனால் தம்மை மறந்து விடுகின்றார். முல்லை நம்முடன் பேசுமா? நாம் சொல்வதைக் கேட்குமா? சாத்தன் மறைவை உணருமா? என்றெல்லாம் பகுத்துப் பார்க்கும் அறிவு அங்கே ஒடுங்குகிறது. ஒடுங்கவே சாத்தன் மறைவை உணர முடியாத, சொல்லும் சொற்களைக் கேட்க முடியாத முல்லையிடம் சென்று இவ்வாறெல்லாம் புலம்புகின்றார். அப் புலம்பலைக் கேளுங்கள்:

“இளையோர் சூடார்வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே” (புறம். 242)

இப் பாடலைப் படிக்கும்போதே அவலம் அரும்பும்; வாய்விட்டுப் படித்தால் உள்ளம் உருகும்; இன்னும் இசையுடன் பாடத் தெரிந்து பாடிவிட்டால் நம்மையும் அறியாமல் உடல் நடுங்கும்; உள்ளம் துளங்கும்; கண்கள் கலங்கும். கையறு நிலை பாடிய புலவர் நம்மையும் கையறு நிலைக்குக் கொண்டுவந்துவிடுகிறார்.

மயக்குறு மக்கள்

பாண்டியன் அறிவுடைநம்பி, அரசன் மட்டுமல்லன், ஒரு பெரும் புலவனாகவும் விளங்கினான். குழந்தைகளைப் பற்றி அவன் பாடிய பாடலொன்று