பக்கம்:எழிலோவியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

களுக்குச் சமமாகக் கூறலாம், தாம் கண்ட காட்சிகளைச் சிறிதும் வழுவாமல் படம் பிடித்துக் காட்டுவது போன்று எளிய சொற்களைக் கொண்டு பொருள் ஆழத்தோடு அமைத்திருப்பது இவருடைய அறிவின் திறமையினையும் பிற்காலத்தே இவர் அடையத் தக்க அழியாப் பெரும் புகழின் சிறப்பினையும் நமக்கு விளக்கிக் காட்டுகின்றது. 'உப்பிய வயிற்றைத் தூக்கி ஒரு பையன் ஓடி வந்தான். சப்பிய பனங் கொட்டையோ? தலையோ? என்று ஐயங் கொண்டேன்' என்று ஓர் ஏழைச் சிறுவனை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார். கிழவி தன் எழுவகைப் பருவத்தையும் எண்ணிப் பார்க்கின்ற அழகு எல்லோருள்ளத்தையும் கொள்ளை கொள்ளச் செய்கின்றது.

மேல் நாட்டிலே ஜேம்ஸ் ஆன்டர்சன் என்னும் அறிஞர் சின்னஞ் சிறு குழந்தைகளுக்காகப் பொய்க் கதைகள் கட்டியிருக்கின்றார். அவர் 'விளக்குத் தூண்', 'செல்லாக் காசு', ‘மைக்கூடு' போன்ற எதையும் கதைக்கு அங்கமாக வைத்துக் கொண்டும் அழகாகக் கதை புனைந்து அதில் பல அரிய நீதிகளையும் புகுத்தியிருக்கின்றார். வாணிதாசனார் பாடல்களும் அந்தத் தன்மையைச் சேர்ந்தவையே யாகும். இவர் எதையும் வருணித்துப் பாடுவார். உயர்ந்த மாளிகை, இடிந்த வீடு, தழைத்த மரம், உதிர்ந்த பூ, ஆறு, மலை, சுடுகாடு முதலிய யாவும் பல புதிய கருத்துக்களோடு இவருடைய பாட்டில் திகழ்கின்றன. மிக அழகிய தோற்றத்தோடு விளங்கி ஆடல் பாடல்களில் ஈடுபட்டு முடிவில் வாடி வதங்கி நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் ஒரு பூவினைப் பத்துப் பாடல்களால் இவர் சிறப்பித்துப் பாடுகின்றார். அது மக்களின் வாழ்க்கையை எண்ணிப் பார்ப்பதற்கும், தம்மைத் தாம் திருத்திக் கொள்வதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 'வாழ்வினில் இன்ப துன்பம் மலிந்திட்ட போதும் மேலோர் தாழ்ந்திடார்' என்னும் அரிய கருத்தினை அந்த 'வாடிய மல'ரின் மூலம் எமக்கு உணர்த்துகின்றார். இளமைப் பருவம் கழிந்தால் மீண்டும் அப்பருவ இன்பம் நமக்குக் கிட்டாது என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/10&oldid=1301687" இலிருந்து மீள்விக்கப்பட்டது