பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


வெறி கொள்வதிலும், எதிராளிமேல் பகை கொள்வதிலும், கோபமாக ஆடுவதிலும் ஆட்டம் சிறப்பாக வருவதில்லை. அமைவதுமில்லை. அதில் எந்தவிதமான நன்மையும் கிடைத்துவிடுவதில்லை.

இந்த உயர்ந்த கொள்கையினை மனதில் பதித்துக் கொண்டு, உற்சாகமாக உத்தமமான வழியிலே விளையாடும் ஆட்டக்காரர்களே உயர்ந்த ஆட்டக்காரர்களாகவும்; உலகம் புகழ்ந்தேத்தி மகிழும் உன்னத சீலர்களாகவும் ஆகி வரலாற்றிலே பெருமைக்குரிய சிறப்பான இடத்தையும் பெற்றுக் கொள்கின்றார்கள்.

விளையாடும் குழந்தைகளுக்கு இத்தகைய இனிய உணர்வினை, நினைவினை, நிலையினை, சிறு விளையாட்டுக்களை நடத்தித் தருகின்ற ஆசிரியப் பெருமக்கள் ஊட்டிவிட வேண்டும். குழந்தைகள் உடலானது, நமது விருப்பம் போலவே செயலால் வளையும் என்பது மட்டுமல்ல, நாம் எதிர்பார்ப்பது போல் பண்புகளால் விளையும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சத்தியமும் சர்வ வல்லமையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்கின்ற சிற்பிகளாக உடற்கல்வி ஆசிரியர்களும், விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருப்பவர்களும் செயல்பட முடியும் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. அதற்கேற்ற வாய்ப்புக்களும் உள்ளன. அதன் பெருமையை உணர்ந்து நாம் செயல்படுவோமாக!

அதிகமான எண்ணிக்கையில் ஆடுவதற்காக குழந்தைகள் ஆட்டத்தில் பங்கு பெறுவதால், மோதல்கள் நிகழலாம். விபத்துக்கள் நேரவும் நேரலாம் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்து, அவற்றைத் தடுக்கவும், தவிர்க்கவும், நேர்ந்த பின் தேவையானவற்றை சரி செய்து