பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


மூன்று ரயில் வண்டிகளில் ஏதாவது ஒரு வண்டியை சரக்கு வண்டியினர் பற்றிக் கொண்டுவிட்டால், அந்த சரக்கு வண்டியினர் ரயில் வண்டியாக மாற, பிடிபட்ட ரயில் வண்டியினர் சரக்கு வண்டி ஆட்டக்காரராக மாறிட ஆட்டம் மீண்டும் தொடரும்.

குறிப்பு: ஒடுவதற்கென்று ஒரு எல்லை குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். அதற்குள் தான் தப்பி ஒட வேண்டும்.

குழுவினர், இடுப்புப் பிடியினால் இணைந்துள்ள ரயில் வண்டித் தொடர் எந்தச் சமயத்திலும் அறுந்து போகாத வண்ணம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆட்டத்தில் பங்கு பெற முடியும்.

34. மன்னரும் மெய்க்காப்பாளரும்

(His Royal Highness)

ஆட்ட அமைப்பு: ஆட இருக்கின்ற இடம் 100 சதுர அடி அளவாவது இருக்க வேண்டும். ஒரு வகுப்பில் உள்ள குழந்தைகள் அனைவரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டு ஆட வைக்கலாம்.

ஆடுகளத்தின் மத்தியில் ஒரு சிறுவட்டம் ஒன்றை முதலில் போட்டிருக்க வேண்டும். அந்த சிறு வட்டத்தை மன்னர் அமரும் சிம்மாசனம் என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆட்டக்காரர்களில் ஒருவரை மன்னர் என்றும் அவருக்குத் துணையாக இருக்கும் மெய்க்காப்பாளராக இரண்டு ஆட்டக்காரர்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.