பக்கம்:ஓங்குக உலகம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவுகட்டி விடாதீர்கள்

127


பல கோடி துகள்கள் புலப்படும். இவற்றையும் அப் பெருஞ் சூரியன் அளவையும், தூரத்தையும் பிற வேறுபாடுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த அண்டகோளங்கள் இக் கண்ணில் காண முடியாத சிறு துகள்களிலும் மிகச் சிறியவை. ஆனால் பேரண்டமும் அதற்கப்பால் உள்ள பேராற்றலும் அவ்வாற்றலை இயக்கும் இறைநிலையும் சூரியனைக்காட்டிலும் இன்று காணும் அண்ட முகட்டைக் காட்டிலும் பெரியன. இந்த நிலை நினைக்கக்கூட முடியாத ஒன்று. இன்றைய ஆய்வாளர்கள் இந்த உவமையை எண்ணுவார்களாயின் ‘முடிவு கட்டி விட்டோம்’ என்று கூற முடியுமா? ஆம்! அண்டகோளங்களும் பேரண்டமும் அத்துணை விரிவுடையன. இவை பற்றி மணிவாசகர் கூறிய அடிகள் இவைதாம்.

‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருங் தன்மை வளப்பருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன்
இல் நுழை கதிரின் துன் அனுப்புரையச்
சிறிய வாகப் பெரியோன்’

இவ் வடிகளால் பேரண்ட நிலையும் அண்ட கோளங்களின் அமைப்பும் ஓரளவே நமக்குப் புலனாகின்றன. இவைபற்றி ஆய்வு தேவை. இந்த ஆய்வின் முடிவே அருளுணர்வை வளர்ப்பதாகும். எனவே எட்டாத முடிவை ஆய்ந்து என்ன பயன் என்று யாரும் வாளா இருத்தல் கூடாது. வேண்டும் இன்பம் பெற்றுவிட்டால் மகிழ்ச்சி முற்றுப் பெற்றுவிடும். அந்த இன்பம் எங்கே எங்கே என்று ஆய்வதிலேதான் பெருமகிழ்ச்சி வளர்ந்துகொண்டே இருக்கும். எனவே உயிர்கள் இன்புற, உலகம் செழிக்க, மண்ணிலிருந்து விண்ணுக்குத் தாவி வேறு வாழ்வின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/130&oldid=1135833" இலிருந்து மீள்விக்கப்பட்டது