பக்கம்:ஓங்குக உலகம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளுவர் வகுத்த அரசு

155


களுக்கு முன் கற்றவர்களுக்கு, எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு வாக்குரிமை இருந்தமை அறிவோம். நாடாளும் நல்ல தலைவர்கள் கற்க வேண்டிய கல்வியைக் கசடறக் கற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து இல்லை. அத்தகைய கற்பன கற்றவரைத் தலைவராக்கும் கடமை நாட்டில் வாழ்ந்த கற்றவர்களுக்கே இருந்தது என்பது தேற்றம். எனவே தான் வள்ளுவர் கல்வி, கல்லாமை என்ற இரண்டு அதிகாரங்களில் கல்வியின் ஏற்றத்தையும் அதைக் கண்ணாகக் கொள்ளவேண்டிய இன்றியமையாமையினையும் விளக்குகிறார். அவ்வாறு கற்றவரே நாடாளும் மன்னரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தையும் அம் மன்னரும் கற்றவர் குழுவைச் சேர்ந்தவராகவே இருக்கவேண்டிய நிலையையும் (among themselves) உணர்தல் வேண்டும். மன்னன் தன் மனம்போன போக்கிலே போக இயலாது என்பதை வள்ளுவர் பல அதிகாரங்களில் நன்கு விளக்குகிறார். பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரத்தில் “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும்” என்பார். அவன் கெடாத பரம்பரையில் வருபவனாயின், இவர்கள் துணையில்லாவிடின்-கற்றார் பெரியார் துணையில்லாவிடின்-கெடுவான் என்று கூறுவதன் பொருள் என்னை? அவ்வாறாய பெரியவர்கள் துணை இன்றேல் அவன் என்றும் தள்ளப்படுவான் என்பதுதானே? இதுதானே இன்றைய நாட்டு நிகழ்ச்சியும்.

அரசியலில் அறிவுடைமை என்ற அதிகாரம் அமைக்கப் பெற்றுள்ளது. அரசன் அறிவுடையனாயின் மற்வவர் அறிவற்றவர்களாவாரா? அதுமட்டுமின்றி அவ்வறிவின் திறத்தை அவர் காட்டும்போது அரசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/158&oldid=1127952" இலிருந்து மீள்விக்கப்பட்டது