பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6
பாசத்தின் கூற்று


காலை இளங்காற்றிலே பறந்த அந்த அழகிய பட்டம் காற்றை எதிர்த்து மேலே விண்ணிலே செல்ல எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. கீழே மண்ணை நோக்கிச் சாய ஆரம்பித்தது.

ஹோட்டல் ஆரம்பமாகி மூன்று மணி நேரமாகியுங்கூட, இன்னமும் ஜெயராஜ் திரும்பாதது கண்டு, ஹோட்டல் முதலாளி மகன் கோபுவுக்கு ஐயம் தட்டத் தொடங்கியது. பெரியவர் மாதிரியே அவனுக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

நேற்று வந்து தேடிய ஏழைக் கிழவன் சாம்பான் இன்றும் வந்தான். மகனைப் பற்றித் தடயம் ஏதாவது கிடைத்ததா என்று ஆவல் பொங்கக் கேட்டான்.

ஐயர் கையை விரித்தார்.

சாம்பான் போய்விட்டான்.

இருந்திருந்தாற்போல என்னவோ நினைத்தவராக, 'விசுக்'கென்று எழுந்த கனபாடி கங்காதரம் ஐயர் பொடி மட்டையுடன் உள்ளே சென்றார். கொல்லைப்புறம் இருந்த பெட்டிகளில் ஜெயராஜின் பெட்டியைக் கேட்டு அதன் பூட்டை உடைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/45&oldid=1282401" இலிருந்து மீள்விக்கப்பட்டது