பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

இரண்டு நாள் பட்ட கஷ்டங்களை அவனால் மறப்பது சாத்தியமா?

காலாற, சிறுபொழுது நின்றான்; பின்னர், புறப்பட்டான்; சுற்று முற்றும் பார்த்தான்; மணிக்கூண்டு பளிச்சிட்டது. அந்தி வெயிலில் எவ்வளவு அழகுகொண்டு விளங்கியது அந்த மணிக் கூண்டு!...

பஸ் நிலையத்தின் பரபரப்பைக் கடந்து ராமநாதன் செட்டியார் ஹால் வாசலில் நின்று, முச்சந்தியில் வழி வகைகளை வெகு சிறப்புடன் காண்பித்துக் கொண்டிருந்த போலீஸ்காரரின் திறனை வியந்தபடி திரும்பினான். விண்முட்டிய கோபுரக் கலசம் தெரிந்தது. 'ஆஹா! பாடப் புத்தகத்திலே படிச்சது கனகச்சிதமாக இருக்குதே!... கலசத்தின் நிழல் படியாத அதிசயத்தையும், ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் நந்தியையும் நேரில் பார்த்து ரசித்து, அதே ரசனையுடன் ராஜராஜ சோழனின் கலாபிமானப் புகழையும் போற்றவேணும்! ...' என்று இளம் மனத்தில் நினைவுகள் விளையாடலாயின. சோழர் மண் அவனை மெய்ம்மறக்கச் செய்தது போலும்!

காந்திஜி வீதியில் வந்து மிதித்து, குறுக்கிட்ட வளைவுப் பகுதியையும் கடந்து, பூங்காவின் கீழ் முனையில் ஒதுங்கி நின்றான் உமைபாலன். லேசாகத் துளிர்த்திருந்த வேர்வையைத் தன்னுடைய சட்டையின் நுனியினால் துடைத்தான். கிழிசல் சடக்கென்று முத்தமிட்டது; கிழிசலின் அளவு சற்றே விரிந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/7&oldid=1110649" இலிருந்து மீள்விக்கப்பட்டது